தமிழ்நாடு முழுவதும் ஆடிப் பெருக்கு விழா (ஆடி 18) இன்று ஆகஸ்ட் 3-ந் தேதி உற்சாகமாக கொண்டாடப்பட்டது. காவிரியில் வெள்ளம் கரைபுரண்டோடுவதால் காவிரி கரையோரங்களில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் ஆடிப் பெருக்கை வெகு உற்சாகமாக கொண்டாடினர்.
ஆடி 18 அல்லது ஆடிப் பெருக்கு என்பது தமிழர் வாழ்வியலில் ஒரு -பகுதி. ஆடி மாதம் 18-ந் தேதியன்று புதுமண தம்பதிகள் நீர்நிலைகளில் நீராடி வழிபாடு நடத்துவர். வாழை இலையில் தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு, காதோலை கருகமணி உள்ளிட்டவை வைத்து சூரியனையும் நீர்நிலையையும் வழிபடுவது ஆடி 18-ன் முதன்மை நிகழ்வு. சுமங்கலி பெண்கள் தாலியை மாற்றி புது தாலிக் கயிறு அணிவதும் வழக்கம். குல தெய்வ கோவில்களுக்கு பாதயாத்திரையாக சென்று வழிபடுவர்.
தமிழ்நாட்டில் ஆறுகளில் ஆடிப் பெருக்கு உற்சாகமாக கொண்டாடப்படும். காவிரி நதி பாய்ந்தோடும் மாவட்டங்களில் காவிரி கரைகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இன்று ஆகஸ்ட் 3-ந் தேதி காலை முதலே குடும்பங்களாக ஒன்று கூடி ஆடிப்பெருக்கை கொண்டாடினர்.
காவிரியில் தற்போது வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. ஈரோட்டில் காவிரி, பவானி இரண்டு ஆறுகள் ஓடுவதால் மக்கள் வெள்ளம் அலைமோதியது. ஆடிப் பெருக்கு விழாவில் எந்த அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.