மருத்துவமனைக்கு செல்லும் வழியில் ஆட்டோவில் வலியால் துடித்த கர்ப்பிணி பெண்ணுக்கு, பெண் காவலர் ஒருவர் பிரசவம் பார்த்த சம்பவம் பாராட்டப்பட்டு வருகிறது. தற்போது தாய், சேய் இருவரும் நலமுடன் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் வேலம்பாளையம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட திருமுருகன்பூண்டி ரிங் ரோடு அருகே நேற்று நள்ளிரவில் போலீசார் வாகன சோதனையில் ஈடுப்பட்டிருந்தனர்.
அங்கு எஸ்.ஐ. பிரபுதேவா, போலீஸ் மணிகண்டன், ஆயுதப்படை போலீஸ் கோகிலா, வெற்றி செல்வன் ஆகியோர் பணியில் இருந்தனர்.
அப்போது போலீசாரை கடந்து சென்ற ஆட்டோவில் இருந்து ஒரு பெண் கதறி அழுவது தெரிந்தது. இதனையடுத்து போலீசார் அறிவுறுத்தலின் பேரில் டிரைவர் ஆட்டோவை உடனடியாக நிறுத்தினார்.
அப்போது ஆட்டோவில் இருந்த வடமாநிலத்தைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவர் பிரசவ வலியால் துடித்தது தெரிந்தது. உடனே பெண் போலீஸ் கோகிலாவை ஆட்டோவில் ஏறும்படி உத்தரவிட்ட எஸ்.ஐ. பிரபுதேவா, தான் அருகிலுள்ள இஎஸ்ஐ மருத்துவமனைக்கு சென்று மருத்துவ முன்னேற்பாடுகளை செய்வதாக கூறி புறப்பட்டார்.
ஆனால் ஆட்டோவில் செல்லும் வழியிலேயே பனிக்குடம் உடைந்த நிலையில், அந்த பெண்ணுக்கு போலீஸ் கோகிலாவே பிரசவம் பார்த்துள்ளார். பின்னர் மருத்துவமனைக்கு இருவரையும் கொண்டு சென்ற நிலையில் அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளனர்.
இதனையடுத்து அவசர நேரத்தில் துரிதமாக செயல்பட்டு பிரசவம் பார்த்த பெண் போலீஸ் கோகிலா மற்றும் பணியில் துரிதமாக செயல்பட்ட மற்ற போலீசாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இதுதொடர்பாக பிரசவம் பார்த்த காவலர் கோகிலா கூறுகையில், ”நான் திருப்பூரில் ஏ ஆரில் கிரேட் 2 போலீசாக சமீபத்தில் தான் பணியில் சேர்ந்தேன். சுதந்திர தினத்தையொட்டி கமிஷனர் உத்தரவு பேரில் நாங்கள் நேற்றிரவு திருமுருகன்பூண்டி ரவுண்டானா அருகே எஸ்.ஐ தலைமையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தோம்.
அப்போது அங்கு வந்த ஒரு ஆட்டோவில் இருந்து ஒரு பெண் கதறி அழும் சத்தம் கேட்டது. அதனை நிறுத்தி பார்த்தபோது, அதிலிருந்த கர்ப்பிணி பெண்ணின் பனிகுடம் உடைந்து, குழந்தை பாதி வெளியே வந்திருந்தது தெரிந்தது.
நான் நர்சிங் படித்திருந்தால், ஆட்டோவில் செல்லும்போதே அவருக்கு பிரசவம் பார்த்தேன். பெண் குழந்தை பிறந்தது. பின்னர் மருத்துவமனைக்கு சென்று இருவரையும் அனுமதித்தோம். தற்போது தாயும் சேயும் நலமுடன் உள்ளனர்.
நான் கடந்த 2023ஆம் ஆண்டு நர்சிங் முடித்து 8 மாதங்கள் ஒரு தனியார் மருத்துவமனையில் செவியராக பணியாற்றினேன். அதன்பின்னர் எனக்கு பிடித்த போலீஸ் பணியில் சேர்ந்தேன். நான் படித்ததை தற்போது பயன்படுத்தியதை நினைத்து எனக்கு பெருமையாக உள்ளது” எனத் தெரிவித்தார்.
போலீசார் விசாரணையில், ஆட்டோவில் வந்தது ஒடிசாவை சேர்ந்த சீதாராம் – பாரதி தம்பதி என்பதும், அவர்கள் அவிநாசி கைகாட்டிபுதுாரில் தங்கி பனியன் நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சென்று வருகின்றனர் என்பதும் தெரியவந்தது.