கரூரில் நடிகர் விஜய்யின் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவில் ஆதவ் அர்ஜூனா தமது எக்ஸ் பக்கத்தில், இளைஞர்கள் புரட்சி செய்ய வேண்டும் என பதிவிட்டிருந்தார். ஆதவ் அர்ஜூனாவின் பதிவிற்கு தவெக உள்ளிட்ட பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் தமது எக்ஸ் பக்க பதிவை நீக்கிவிட்டார்.
இந்நிலையில் இன்று (செப்டம்பர் 30) திமுக எம்.பி ஆ.ராசா சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், “தவெக இயக்கத்திற்கு பணம் கொடுக்கும் முக்கிய இடத்தில் இருக்கும் ஆதவ் அர்ஜுனா தனது ட்விட்டரில் நேபாளத்தில் நடந்தது போல இங்கு புரட்சி நடக்க வேண்டும் என்கிறார் அகில இந்தியாவின் வளர்ச்சியே வெறும் 8.5 சதவிகிதம். ஆனால் இங்கு 12 சதவிகிதத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அமைதியாக இருக்கும் தமிழ்நாட்டில்; வளர்ச்சியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் தமிழ்நாட்டில் ஒரு புரட்சி வரவேண்டும் என்று இந்தியாவினுடைய இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் எதிராக ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். அதற்கு விமர்சனம் வந்ததும் அதை நீக்கி விட்டார்.
அந்த பதிவை நீக்கும் அளவிற்கு தமிழ்நாட்டு மக்கள் உணர்வோடு இருக்கிறார்கள் என்பதற்காக தமிழ் நாட்டு மக்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். ஆனால் அந்த பதிவை போட்டவரை அக்கட்சியின் தலைவர் விஜய் கண்டித்துள்ளாரா அல்லது தவறு என்று அறிக்கை வெளியிட்டுள்ளாரா..
எனக்கு தனிப்பட்ட முறையில் சில கேள்விகள் உள்ளது. களத்தில் இருக்க வேண்டிய தலைவர்கள் ஏன் கரூரில் களத்தில் நிற்கவில்லை. செய்தி அறிந்த பிறகும் அவசர அவசரமாக செய்தியாளர்களை சந்திக்க கூட பயந்து கொண்டு, வெட்கப்பட்டுக்கொண்டு ஏன் சென்னைக்கு வந்தீர்கள்.
விஜய் பிரபல நடிகர். அவர் இருந்தால் கூட்டம் கூடும். எனவே திருச்சியில் தங்கி கொண்டு, இப்போது டுவிட்டர் போடும் தலைவர்கள் எல்லாம் களத்தில் நின்று இறப்புக்கு நிவாரணம் கொடுத்து, அவர்களுக்கு ஏன் ஆறுதல் சொல்லவில்லை.
அவர்களை அறியாமல் அவர்களுக்குள் இருக்கும் குற்ற உணர்வுதான். நம்மால் தான் இது நடந்தது என்ற ஒப்புதல். அவர்கள் மனசாட்சியில் இருப்பதால் ஒளிந்து கொண்டு விட்டனர் என்று சரமாரியாக குற்றம் சாட்டி உள்ளார்.