தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வரும் ஜனவரி 9-ஆம் தேதி பொன்னேரியில் ‘உங்கள் கனவை சொல்லுங்கள்’ என்ற புதிய திட்டத்தைத் தொடங்கி வைக்க உள்ளார்.
சென்னையில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று (ஜனவரி 6) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “2021-இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு கொரோனா தொற்றிலிருந்து நாம் மீள்வதற்கே எத்தனை மாதங்கள் ஆனது என்பதை அனைவரும் உணர்வீர்கள். இன்று அதையெல்லாம் கடந்து தமிழக முதல்வர் பொருளாதாரத்தை இரட்டை இலக்க வளர்ச்சிக்குக் கொண்டு சென்றுள்ளார்.
மகளிர் உரிமைத் திட்டம், புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை முதல்வர் கொண்டு வந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இந்தியாவிலேயே நம்பர் ஒன் மாநிலமாக ‘சூப்பர் ஸ்டார் ஸ்டேட்’ என்ற பெருமையை நாம் பெற்றுள்ளோம்.
ஆனால் இது மட்டும் போதுமா? கண்டிப்பாக இன்னும் அதிகம் செய்ய வேண்டும் என்று அடிக்கடி முதல்வர் சொல்லிக்கொண்டே உள்ளார். அதன் அடிப்படையில் தான் பல நிதி நெருக்கடி இருந்தாலும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.இது நமக்கான பெருமை. அதுமட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களும் ‘நாங்களும் இதுபோன்ற திட்டங்களை கொண்டு வர வேண்டும்’ என்று சொல்கிறார்கள்.
‘இது உங்கள் காசா? மக்களுடைய காசு தானே’ என்கிறார்கள். ஆமாம், மக்களுடைய பணத்தின் வாயிலாக பயனுள்ள திட்டங்களை மீண்டும் நாங்கள் மக்களிடமே தருவதைப் பார்க்கிறீர்களா? இல்லை, பயனற்ற திட்டங்களைச் சிலர் செய்து பணத்தை வீண் விரயம் செய்தார்களே அதைப் பார்க்கப் போகிறீர்களா?தமிழக முதல்வர் சொல்லுவது போல் எல்லாவற்றுக்கும் நல்ல பக்கமும் கெட்ட பக்கமும் இருக்கும்.
நாங்கள் எங்களைப் பொறுத்தவரை தமிழ்நாட்டு மக்கள் தருகின்ற பணத்தின் மூலம் பயனுள்ள திட்டங்களைக் கொடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். இப்போது மிகப்பெரிய அடித்தளத்தை நாம் கொண்டு வந்து விட்டோம். தற்போது அடுத்த கட்டமாக வளர்ச்சியை நோக்கி கொஞ்சம் கொஞ்சமாகச் சென்று கொண்டிருக்கிறோம்.
மற்ற மாநிலங்களும், மற்ற நாடுகளும் உற்று நோக்கும் ஒரு மாநிலமாக நாம் மாறி வருகிறோம். இது நமக்கான பெருமை.அடுத்த கட்டமாக முதல்வர் ‘உங்கள் கனவை சொல்லுங்கள்’ என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளார். இதில் ஒவ்வொரு குடும்பம், இளைஞர்கள், அயலகத் தமிழர்கள் உள்ளிட்ட பல தரப்பினருடைய கனவுகளும் கேட்கப்படும்.இந்தத் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் தொடங்கி வைக்க உள்ளார். 30 நாட்கள் இந்தத் திட்டத்திற்கான வேலைகள் நடைபெறும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
