சென்னை: கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகத்தில் ரவுடி படுகொலை –8 பேர் கைது

Published On:

| By Pandeeswari Gurusamy

தமிழகத் தலைநகர் சென்னையில் உள்ள கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை (KMC Hospital) வளாகத்தில் இன்று (ஜனவரி 12) அதிகாலை ஒரு பிரபல ரவுடி சரமாரி வெட்டுத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய 8 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கொளத்தூர் மகாத்மா காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த ஆதி (ஆதிகேசவன், வயது 23) என்ற இளைஞர் இவ்வாறு கொலை செய்யப்பட்டார். இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 7-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. கொளத்தூர் காவல் நிலையத்தில் ‘பி-பிரிவு’ ரவுடியாக (சரித்திரப் பதிவேட்டில்) பதிவாகியுள்ளார். ஆதிக்கு பழக்கமான சுசித்ரா (வயது 21) என்ற பெண்ணுக்கு கடந்த டிசம்பர் 18-ஆம் தேதி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. குழந்தை உடல்நலக் குறைவால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்றிரவு (ஜனவரி 11) உயிரிழந்தது.

ADVERTISEMENT

இந்நிலையில், ஆதி நேற்றிரவு மருத்துவமனைக்கு வந்து குழந்தை இறப்பு குறித்து மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர், மகப்பேறு வார்டு (பிரசவ வார்டு) அருகேயுள்ள காத்திருப்புப் பகுதியில் ஆதி, சுசித்ரா மற்றும் அவரது தோழி சாருமதி மூவரும் உறங்கிக் கொண்டிருந்தனர்.

அதிகாலை சுமார் 3 மணியளவில் ஹெல்மெட் அணிந்த மர்ம கும்பல் மருத்துவமனை வளாகத்துக்குள் புகுந்து தூங்கிக் கொண்டிருந்த ஆதியை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டியது. தலை, இடது கை, வலது கால் ஆகிய பகுதிகளில் பலத்த வெட்டுக் காயங்கள் ஏற்பட்டன. ஆதியின் அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த நோயாளிகளும் ஊழியர்களும் உடனடியாக வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

ADVERTISEMENT

ஆனால், போலீசார் வருவதற்கு முன்னரே குற்றவாளிகள் தப்பி ஓடினர். உடனடியாக அவசர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்ட ஆதி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முன் விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவத்தில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்; இரு பெண்கள் உட்பட சிலர் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

இந்தப் படுகொலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share