எம்ஜிஆர் நடித்த முதல் படம் சதிலீலாவதி (வெளியான தேதி 1936 ஆண்டு பிப்ரவரி ஒன்றாம் தேதி). இந்தப் படத்தில் எம்ஜிஆருக்குக் கொடுக்கப்பட்டது ரங்கைய நாயுடு என்று அயோக்கியத்தனமான இன்ஸ்பெக்டர் வேடம். இந்தப் படத்தின் கதையை எழுதியவர் ஜெமினி ஸ்டுடியோ அதிபர் எஸ்எஸ் வாசன்.
சரியாக முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு எம்ஜிஆரின் நூறாவது படத்தை ஜெமனி ஸ்டுடியோ சார்பில் எஸ்எஸ் வாசன் தயாரித்தார்.
மீனா குமாரி, தர்மேந்திரா நடிக்க, ஓபி.ரால்ஹன் எழுதி தயாரித்து இயக்கி ஒரு முக்கிய வேடத்திலும் நடித்து 1966 ஆகஸ்டு 14 வெளியாகி, மாபெரும் வெற்றி பெற்ற Phool Aur Patthar என்ற இந்திப் படத்தின் ரீமேக் தான் ஒளிவிளக்கு. இந்திப் படம் வெளியாகி இரண்டாண்டுகள் ஒரு மாதம் ஒரு வார இடைவெளியில் 1968 செப்டம்பர் 20 ஆம் தேதி ரிலீஸ் ஆனது ஒளிவிளக்கு.
ஒளி விளக்கு படத்தின் படப்பிடிப்பின் போது நடந்த சம்பவம் இது.
கதைப்படி ஒரு காட்சியில் கதாநாயகனாக எம்ஜிஆர் குடித்து விட்டு வரவேண்டும். அதுவரை சினிமாவில் மது அருந்தாத, சிகரெட் பிடிக்காத நாயகனாக தன்னை வரித்துக் கொண்டவர் எம் ஜி ஆர்.
தான் ஹீரோவாக நடித்த ஆறாவது படமான அந்தமான் கைதி படத்தில் ஒரு காட்சியில் சிகரெட் புகைத்துக் கொண்டு நடிக்க வேண்டும் என்று அதன் இயக்குனர் கிருஷ்ணன் சொன்னபோது, மறுத்து விட்டு சிகரெட்டை கையில் மட்டும் வைத்துக் கொண்டு நடித்தவர் எம்ஜிஆர். இதுவோ நூறாவது படம்.
ஒளி விளக்கு படம் ஆரம்பித்த போது, எம்ஜிஆர் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருந்தார். எனவே குடிகாரனாக நடிக்க வேண்டாம் என்பது எம் ஜி ஆரின் முடிவு. ஆனால் படத்துக்கு அப்படி ஒரு காட்சி வேண்டும் என்பது எஸ் எஸ் வாசனின் தீர்மானம்.
அந்தக் காட்சியை எடுக்க கால்ஷீட் கேட்ட போது எம்ஜிஆரிடம் இருந்து இசைவான பதில் வரவில்லை.
ஒரு நிலையில் எஸ்எஸ்வாசன் தனது மேலாளராக இருந்த நம்பியாரிடம் (எம் என் நம்பியார் அல்ல) ஒரு விஷயம் சொன்னார். அதன்படியே காரில் கிளம்பி எம் ஜி ஆரின் ராமாவரம் தோட்டத்துக்குப் போனார் நம்பியார்.
எம் ஜி ஆரிடம், இந்த எஸ் எஸ் வாசன் மேனேஜர் நம்பியார் கால்ஷீட் கேட்க, “அந்தக் காட்சி வேண்டாம் வேறு எந்தக் காட்சிக்கு வேண்டுமானாலும் கால்ஷீட் தருகிறேன்” என்றார் எம் ஜி ஆர்.
நிதானமாக எழுந்த நம்பியார் காரில் இருந்து சில படச் சுருள் பெட்டிகளைக் கொண்டு வந்து எம் ஜி ஆர் முன்பு போட்டார். மீண்டும் காரில் இருந்து ஒரு கேன் எடுத்து வந்தார்.
“என்ன இது ?” என்று எம் ஜி ஆர் கேட்க,
”ஒளிவிளக்கு படத்துக்காக இதுவரை எடுத்த காட்சிகளின் நெகட்டிவ் இது. நீங்கள் இனியும் அந்தக் குடிகாரன் காட்சிக்கு கால்ஷீட் தரவில்லை என்றால், இதுவரை எடுத்த மொத்த படச்சுருளையும் உங்கள் முன்னால் பெட்ரோல் ஊத்திக் கொளுத்தி விட்டு வரும்படி சார் சொன்னார் சார்” என்றார் நம்பியார்.

எம் ஜி ஆரின் நூறாவது படம் பற்றிய எதிர்பார்ப்பு அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் மட்டுமின்றி பொதுமக்களிடமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், அந்தப் படம் இப்படி ஒரு நிலைமைக்கு ஆளானால் எம்ஜிஆருக்கு அது மிகப் பெரிய பின்னடைவு அல்லவா?
பதறிப் போன எம் ஜி ஆர், தானே எஸ் எஸ் வாசனுக்கு பொன் செய்தார். காத்திருந்த எஸ் எஸ் வாசன் போனை எடுத்தார். இருவரும் மனம் விட்டுப் பேசினார்கள். “நான் அப்படி நடித்தால் மக்கள் என்ன நினைப்பார்கள்?” என்று வருந்தினார் எம் ஜி ஆர். அந்தக் காட்சி எவ்வளவு முக்கியம் என்று சொன்னார் எஸ் எஸ் வாசன்.
நீண்ட விவாதத்தின் முடிவில் எம் ஜி ஆர் சொன்னார் ”சரி படத்தின் ஹீரோவான என் கேரக்டர் குடித்து விட்டு வரட்டும். ஆனால் அதே காட்சியில் மனசாட்சி போல நானே வந்து, ஹீரோவிடம் குடியின் கொடுமைகளைச் சொல்லும்படி ஒரு காட்சி வேண்டும். அது ஒரு பாடல் என்றால் மக்கள் மனதில் இன்னும் தங்கும். இந்த அளவிற்காவது நீங்கள் ஒத்துக் கொள்ள வேண்டும் ” என்றார் எம் ஜி ஆர்.
நெகிழ்ந்து போனார் எஸ் எஸ் வாசன்.
தன் பங்குக்கு அந்தக் காட்சியை மிகப் பிரம்மாதமாக எடுத்து எம் ஜி ஆரை நெகிழ வைக்க வேண்டும் என்று முடிவு செய்தார்.
அன்றைக்கு மிக கடினமான, காஸ்ட்லியான – கலர் படத்துக்கான மாஸ்க் மற்றும் தந்திரக் காட்சிகள் முறையில், எம் ஜி ஆரின் மனசாட்சி வந்து படத்தின் ஹீரோ எம் ஜி ஆரை திட்டி பாடுவதாக பாடல் எடுக்கப்பட்டது. அதுவும் ஒரு எம்ஜிஆர் அல்ல, வண்ணமயமான விதவிதமான உடைகளில் அழகழகாக பளீர் எம் ஜி ஆர்கள்.
அந்த பாடல் முழுக்க மன சாட்சி எம்ஜிஆர்களே பிரம்மாண்டமாகத் திரையை நிறைக்க, படத்தின் ஹீரோவான எம்ஜிஆர் சின்ன உருவில் இருள் பின்னணியில் கருப்பான தோற்றத்தில் மிக குறைவாகவே வருவார். எம் ஜி ஆரின் இமேஜுக்கும் பங்கம் வரவிலை. எஸ் எஸ் வாசனின் விருப்பமும் நிறைவேறியது.
பாடல் காட்சியைப் பார்த்த எம் ஜி ஆர் நெகிழ்ந்து போனார் படம் வந்த நிலையில் அந்தப் பாடல் காட்சி பெருமளவில் பாராட்டுப் பெற்றது.
எம் எஸ் விசுவநாதன் இசையில் வாலி எழுதிய தைரியமாகச் சொல் நீ மனிதன்தானா..?” என்கிற பாடல்தான் அது. இப்போது பார்த்தாலும் சும்மா ஃபயர் விடும் பாடல் காட்சி அது.
ஆனால் ..
நம்பியார் ராமாவரம் தோட்டத்துக்கு கொண்டு போனது ஒளிவிளக்கு படத்தின் உண்மையான படச் சுருள்தானா? என்ற கேள்விக்கு பதில் சொல்ல (ஏனென்றால் அதை சோதிக்கும் மன நிலையில் அப்போது எம் ஜி ஆர் இல்லை), இப்போது எஸ் எஸ் வாசனும் இல்லை. எம் ஜி ஆரும் இல்லை. வாசனின் மேனேஜர் நம்பியாரும் இல்லை. சொல்லப் போனால் எம்என் நம்பியார் கூட இல்லை.
