ஷோரூமின் முதல் தளத்தில் தனது புதிய காரை எலுமிச்சம் பழம் வைத்து ஏற்ற முயன்றபோது, கண்ணாடியை உடைத்துக் கொண்டு கார் எகிறி, தரையில் விழுந்து நொறுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய உலகில் புதிய காரை வாங்குவது என்பது பலருக்கும் ஒரு லட்சியமாகவே இருக்கும். ஆனால் அந்த புத்தம் புதிய கார் விபத்துக்குள்ளானால் அது வாங்கியவருக்கு வாழ்க்கையில் மறக்க முடியாத வடுவாகவே மாறிவிடும்.
டெல்லியில் ஷோரூமில் ஒரு பெண்மணி காரை கையெழுத்திட்டு வாங்கிய அடுத்த சில நிமிடங்களில், அந்த கார் தலைகீழாக கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
கடந்த 8ஆம் தேதி மாலையில் டெல்லியின் நிர்மன் விஹாரில் உள்ள மஹிந்திரா ஷோரூமுக்குச் சென்று ரூ.15 லட்சம் மதிப்புள்ள புத்தம் புதிய தார் காரை வாங்கினார் 29 வயதான பெண்மணி மாணி பவார்.
கார் ஷோரூமின் முதல் மாடியில் இருந்த காரை சாலைக்கு எடுத்து வருவதற்குள், அங்கேயே வழக்கமான சடங்கைச் செய்ய முடிவு செய்தார். அதன்படி கார் சக்கரங்களுக்கு முன்னர் எலுமிச்சம் பழங்கள் வைக்கப்பட்டன.
அப்போது தவறுதலாக ஆக்ஸிலரேட்டரை அதிகம் அழுத்தியதால் அந்த புத்தம்புதிய கார், ஷோரூமின் முதல் மாடியின் கண்ணாடியை உடைத்துக்கொண்டு கீழே இருந்த தார் சாலையில் தலைகீழாக விழுந்து நொறுங்கியது.
அதிர்ஷ்டவசமாக காருக்குள் இருந்த மாணி பவாரும், விகாஸ் என்ற ஷோரூம் ஊழியரும் சீட் பெல்ட் அணிந்திருந்ததாலும், ஏர்பேக்குகள் உடனடியாகத் திறக்கப்பட்டதாலும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.
இருவரும் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு சிகிச்சை பெற்ற நிலையில் வீடு திரும்பினர்.
இந்த விபத்து தொடர்பான சிசிடிவி வீடியோ இன்று வெளியான நிலையில், இணையத்தில் வைரலாகி வருகிறது.