சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் வழிபாடு செய்வது குறித்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட மறுஆய்வு மனுக்களை 9 நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு ஏப்ரல் 7 முதல் 22 வரை விசாரிக்கும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் வழிபடுவதற்கு இருந்த தடையை 2018ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் நீக்கி உத்தரவிட்டது. இந்தப் பாலின அடிப்படையிலான தடை அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது. இதன்மூலம் அனைத்து வயது பெண்களும் வழிபடலாம் என்று உறுதி செய்யப்பட்டது.
இந்தத் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளா முழுவதும் பெரும் போராட்டங்கள் நடைபெற்றன. மேலும், தீர்ப்பை எதிர்த்து மறுஆய்வு மனுக்கள் மற்றும் ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று (பிப்ரவரி 16) உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, மறுஆய்வு மனுக்களை விசாரிக்க புதிய 9 நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
மனுதாரர்கள் மார்ச் 14ம் தேதிக்குள் கேரள அரசு உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் எழுத்துப்பூர்வ வாதங்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
சபரிமலை வழக்கு மட்டுமின்றி, பிற மதங்களில் பெண்களுக்கு எதிரான பாகுபாடு தொடர்பான வழக்குகளையும் ஒருங்கிணைத்து விசாரிக்க நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
வழக்குகளை ஒருங்கிணைத்து நீதிமன்றத்திற்கு உதவும் வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் பரமேஸ்வரன் நியமிக்கப்படுவதாக தலைமை நீதிபதி அறிவித்தார்.
மேலும் ஏப்ரல் 7 முதல் ஏப்ரல் 22, வரை 9 நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வில் விரிவான விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
