இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 8 தமிழ்நாட்டு மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். Fishermen Stalin
தமிழகத்தின் ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. மீன்பிடி தடை காலம் முடிந்து மீன்பிடி பருவம் தொடங்கிய நிலையில் கடலுக்கு சென்ற தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது மீனவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதனையடுத்து, 8 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க கோரி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், கைது செய்யப்பட்ட 8 மீனவர்கள், அவர்களது படகை பாதுகாப்பாக மீட்டுக் கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்; மீனவர்கள் பிரச்சனைகளைக் கையாள்வதில், இலங்கை அதிகாரிகளுடன் உரிய தூதரக நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

மேலும் பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், வங்கக்கடலில் மீன் பிடித்து விட்டு கரைக்கு திரும்பிக் கொண்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை கச்சத்தீவு அருகே இலங்கைக் கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தமிழக மீனவர்களுக்கு எதிரான சிங்களக் கடற்படையினரின் இந்த அத்துமீறல் கடுமையாக கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளார்.