நெல்லை மேலத்திடியூர் பகுதியில் செயல்பட்டு வரும் கல்லூரி மாணவர்கள் 8 பேருக்கு எலிக்காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை கோபால சமுத்திரம் அருகே உள்ள மேலத்திடியூர் பகுதியில் PSN என்ற தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரி விடுதியில் தங்கி படித்து உவரியை சேர்ந்த மாணவருக்கு கடும் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து நாகர்கோவிலில் ஒரு மருத்துவமனையில் செய்யப்பட்ட பரிசோதனையில், அந்த மாணவனுக்கு விலங்குகளின் சிறுநீர் மூலம் பரவக்கூடிய ‘லெப்டோஸ்பைரோசிஸ்’ எனும் எலிக்காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்த தகவல் நெல்லை மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் விஜயசந்திரன் தலைமையில் மருத்துவக்குழுவினர் கல்லூரிக்கு சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது மேலும் 15 மாணவர்கள் எலிக்காய்ச்சல் அறிகுறிகளுடன் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி சோதனை நடத்தப்பட்டது.
இதில் 8 பேருக்கு எலிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. உடனடியாக கல்லூரிக்கு விடுமுறை அளிக்க கல்லூரி நிர்வாகத்திற்கு சுகாதாரத்துறை அலுவலர் அறிவுறுத்தினார்.
இதைத்தொடர்ந்து கல்லூரி விடுதியின் சமையலறையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் கல்லூரி சமையலறையில் பூச்சிகள் மற்றும் பூனைகள் இருந்ததும், சமையல் செய்யும் உபகரணங்களான மாவு அரைக்கும் இயந்திரம் உள்ளிட்டவைகள் சுத்தமாக இல்லாததும் அதில் புஞ்சைகள் இருந்ததும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
கல்லூரி சமையலறையில் இருந்து அழுகிய காய்கறிகள் கண்டறியப்பட்டது. கல்லூரி வளாகத்தில் முறையான வடிகால் அமைப்பு பின்பற்றப்படவில்லை துர்நாற்றத்துடன் காணப்பட்டது. இதையடுத்து கல்லூரி கேண்டீனுக்கு வழங்கப்பட்ட உணவு துறை உரிமத்தை அதிகாரிகள் தற்காலிகமாக ரத்து செய்துள்ளனர்.