எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை பேச அனுமதிக்காதது; 8 எம்.பிக்கள் இடைநீக்கத்துக்கு எதிர்ப்பு, அமெரிக்காவுடனான மோடியின் வர்த்தக ஒப்பந்தம் ஆகியவற்றை முன்வைத்து எதிர்க்கட்சி எம்.பிக்கள் முழக்கங்கள் எழுப்பியதால் இன்று பிப்ரவரி 4-ந் தேதி மக்களவை நடவடிக்கைகள் முடங்கின.
சீனா ஆக்கிரமிப்பு, மோடி- டிரம்ப் இடையேயான பேச்சுவார்த்தை ஆகியவை குறித்து மக்களவையில் ராகுல் காந்தி பேசுவதற்கு ஆளும் பாஜக எம்.பிக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனைக் கண்டித்து ராகுல் காந்திக்கு ஆதரவாக முழக்கங்கள் எழுப்பியதால் 8 எதிர்க்கட்சி எம்.பிக்கள் சஸ்பெண்ட் (இடைநீக்கம்) செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகளின் 8 எம்.பிக்கள் கண்டனப் போராட்டம் நடத்தினர். மேலும் இன்று காலை மக்களவை கூடியதும் இந்த விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சிகளின் எம்.பிக்கள் இடைவிடாமல் முழக்கங்கள் எழுப்பினர். அதே போல அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்துக்கு எதிராக “Surrender Modi” எனவும் விமர்சித்து எதிர்க்கட்சி எம்.பிக்கள் முழக்கங்கள் எழுப்பினர். இதனால் மக்களவை நடவடிக்கைகள் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.
முன்னதாக மக்களவை கூடியதும் மத்திய அமைச்சர் ஜிதின் பிரசாதா ஒரு விளக்கம் அளித்தார். அதில், அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தால் இந்தியாவுக்கு எந்த பாதிப்பும் இல்லை என தெரிவித்தார்.
