தீபாவளி கொண்டாடுவதற்காக நேற்று நள்ளிரவு வரை சென்னையில் இருந்து அரசுப் பேருந்துகளில் 8 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று (அக்டோபர் 20) வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. சனிக்கிழமை முதல் 4 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டதால், கடந்த 5 நாட்களாக வெளியூரில் இருக்கும் லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்கு ரயில்கள், பேருந்துகள், தனியார் வாகனங்களில் சென்றுள்ளனர்.
தமிழ்நாடு அரசு தரப்பில் இதற்காக சென்னையில் கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்து வழக்கமான பேருந்துகளுடன், அதிகளவில் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன. இதனை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் அதிகாரிகள் தொடர் ஆய்வு மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 16 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை 15,429 அரசுப் பேருந்துகளில் மொத்தம் 7,94,990 பேர் பயணம் செய்துள்ளதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் மோகன் தெரிவித்துள்ளார்.
அதே போன்று சென்னை மற்றும் பிற இடங்களில் இருந்து அரசுப் பேருந்துகளில் கடந்தாண்டு 1.68 லட்சம் பயணிகள் அரசுப் பேருந்தில் முன்பதிவு செய்து பயணம் செய்த நிலையில், இந்த ஆண்டு 3 நாட்களில் 3.59 லட்சம் பேர் முன்பதிவு செய்து பயணம் செய்திருப்பதாக அமைச்சர் சிவசங்கர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
இதுதவிர தனியார் ஆம்னி பேருந்துகள் மூலம் 2,16,050 பேரும், சிறப்பு ரயில்கள் மூலம் 1,50,000 பேரும், வழக்கமான ரயில்கள் மூலம் 5 லட்சம் பேரும், கார்கள் மூலம் 2,50,000 பேரும் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதும் தெரியவந்துள்ளது.
