வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியின் 2 நிகழ்வுகள் தற்போது பெரும் பேசுபொருளாகி இருக்கிறது.
1) வேடசந்தூர் எம்.எல்.ஏ. காந்திராஜன், துணை முதல்வ உதயநிதி ஸ்டாலினின் காலில் விழுந்து கும்பிட்டது
2) வேடசந்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் வீரா சாமிநாதன் இல்ல திருமண விழா
வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி.. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளது. கரூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்டது.

அதிமுக காந்திராஜன்
வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் 74 வயது காந்திராஜன். இந்த தொகுதியில் 1989-ம் ஆண்டு தேர்தலில் அதிமுக (ஜெ) அணி வேட்பாளராகப் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.1991-ல் மீண்டும் ஒருங்கிணைந்த அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்டு வென்றார். அப்போது தமிழ்நாடு சட்டமன்ற துணை சபாநாயகராகவும் (1993-96) இருந்தார் காந்திராஜன். ஆனால் 1996-ம் ஆண்டு தேர்தலில் வேடசந்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மீண்டும் போட்டியிட்டு தோல்வி அடைந்தார் காந்திராஜன்.
திமுக காந்திராஜன்
2009-ம் ஆண்டு அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். 2014-ம் ஆண்டு திண்டுக்கல் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளராகப் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை.
2021-ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக உள்ளார்.
2026-ல் வாய்ப்பு கிடைக்குமா?
இந்த நிலையில் 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மீண்டும் வேடசந்தூர் தொகுதியில் காந்திராஜன் போட்டியிட விரும்புவதாக அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். அதே நேரத்தில் திமுக தலைமை காந்திராஜனுக்கு எந்த சிக்னலும் தரவில்லை என்கிற குழப்பம் இருக்கிறது.
இந்த பின்னணியில் வேடசந்தூரில் அக்டோபர் 9-ந் தேதி நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் காலில் 74 வயது காந்திராஜன் எம்.எல்.ஏ. விழுந்து கும்பிட்டது கடுமையான விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது.

யார் இந்த வீரா சாமிநாதன்?
அடுத்தது வீரா சாமிநாதன்.. திமுகவின் திண்டுக்கல் மேற்கு மாவட்டத்தில் வேடசந்தூர் தெற்கு ஒன்றியத்தின் செயலாளர். வீரா சாமிநாதனின் மகன் ஶ்ரீகாந்த் திருமண நிகழ்வுகள் தடபுடலாக கடந்த சில நாட்களாக நடைபெற்றது. இந்த திருமன நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று மணமக்களை வாழ்த்தி இருந்தார்.
2023-ம் ஆண்டு தமிழ்நாட்டில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு தீவிரமாக பேசப்பட்டு வந்த நேரத்தில் வேடசந்தூர் வீரா சாமிநாதன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 18 மணிநேரம் தொடர்ந்து சோதனை நடத்தினர். அப்போது ஊடகங்கள் அனைத்தும் ‘செந்தில் பாலாஜியின்’ வலது கரம் வீரா சாமிநாதன் என்றே குறிப்பிட்டன.
அமலாக்கத்துறையின் இந்த சோதனைகளுக்குப் பிறகு தீவிர திமுக செயற்பாடுகளில் சற்று ‘அடக்கி வாசித்த’வர் வீரா சாமிநாதன்.
தற்போது 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் கடந்த சில மாதங்களாக சமூக வலைதளங்களில் ஆக்டிவாகவும் வேடசந்தூர் தொகுதியில் மருத்துவ முகாம்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு ‘வெளிச்சத்தில்’ இருக்கிறார் வீரா சாமிநாதன்.
இந்த ஜரூரில், மகன் ஶ்ரீகாந்த் திருமணத்தை வேடசந்தூர் தொகுதி முழுவதுமே பேசும் அளவுக்கும் நடத்தி இருக்கிறார். இந்த திருமணத்துக்காக ஒவ்வொரு கிராமத்துக்கும் போய் கட்சிக்காரர்கள், கட்சி அனுதாபிகள், கிராமத்தின் பிற கட்சி பிரமுகர்கள் என பலருக்கும் அழைப்பிதழ் கொடுத்தார் வீரா சாமிநாதன்.

இதன் பின்னர் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி தொடங்கி பல்வேறு நிகழ்வுகள் என இந்த வாரம் முழுவதும் வீரா சாமிநாதன் வீட்டு திருமணமே பேசப்பட்டது. இதில்தான் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
வேடசந்தூரும் ஜாதி வாக்குகளும்
வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் ஒக்கலிகா கவுடர்கள் மற்றும் பிள்ளைமார் ஆகிய ஜாதியினர் கணிசமான எண்ணிக்கையில் பெரும்பான்மையினராக உள்ளனர். அண்ணா திமுகவைப் பொறுத்தவரையில் கடந்த பல தேர்தல்களில் ஒக்கலிகா கவுடா ஜாதியைச் சேர்ந்தவர்களையே வேட்பாளர்களாக நிறுத்தி இருந்தது. தற்போதைய திமுக எம்.எல்.ஏ. காந்திராஜனும் ஒக்கலிகா கவுடா ஜாதியைச் சேர்ந்தவர்.
ஆனால் திமுக கடந்த பல தேர்தலில் வெவ்வேறு ஜாதிகளைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து எம்.எல்.ஏ.வாக்கி இருக்கிறது.
தற்போது தொகுதி முழுவதும் பேசப்பட்டிருக்கும் வீரா சாமிநாதன், கொங்கு வேளாள கவுண்டர் ஜாதியைச் சேர்ந்தவர். இந்த தொகுதி முழுவதுமே கொங்கு வேளாள கவுண்டர்களின் வாக்குகள் மொத்தமே 10,000-க்குள்தான் இருக்கும் என்கின்றனர் அரசியல் பிரமுகர்கள்.
கொங்கு வேளாள கவுண்டர்கள், பொதுவாக அதிமுகவின் வாக்குகளாக அறியப்படுகிறவர்கள்; அதேபோல பிள்ளைமார் ஜாதியினரும் அதிமுகவின் வாக்குகளாக அறியப்படுகின்றனர்.
வேடசந்தூர் தொகுதியில் ஒக்கலிகா கவுடா வாக்குகள் திமுக- அதிமுக என இரண்டாகவே பிளவுபட்டுள்ளது. 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஒக்கலிகா கவுடா ஜாதியை சேர்ந்த அதிமுக வேட்பாளர் டாக்டர் விபிபி பரமசிவமும், திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக சக்திவேல் கவுண்டரும் போட்டியிட்டனர். அப்போது ஒக்கலிகா கவுடா ஜாதியினர் ஒருங்கிணைந்து டாக்டர் வி.பி.பி.பரமசிவத்தை வெற்றி பெற வைத்தனர்.
காந்திராஜனும் ஜாதி வாக்குகளும்
2021 சட்டமன்ற தேர்தலி, ஒக்கலிகா கவுடா ஜாதியை சேர்ந்த காந்திராஜன் மற்றும் டாக்டர் விபிபி பரமசிவம் இருவருமே திமுக- அதிமுக வேட்பாளர்களாக மோதினர். அப்போது, “தமது கடைசி தேர்தல் இது.. இந்த ஒரு தேர்தலில் தாம் ஜெயித்தாலே போதும்.. பரமசிவத்துக்கு இன்னமும் வாய்ப்புகள் இருக்கிறது.. ஆகையால் என்னை ஜெயிக்க வையுங்கள்” என ஒக்கலிகா கவுடா மக்களிடம் காந்திராஜன் செய்த பிரசாரம் ‘பரிதாபத்தை’ ஏற்படுத்தியது; அதுவே அவருக்கு வெற்றியையும் தந்தது.
2026 சட்டமன்ற தேர்தலில் காந்திராஜன் மீண்டும் போட்டியிட்டால் அதிமுகவின் வேட்பாளராக இப்போது அக்கட்சியின் இளைஞர் இளம்பெண்கள் பாசறையின் மாநில செயலாளராகிவிட்ட டாக்டர் விபிபி பரமசிவத்துடன் மீண்டும் மோத வேண்டும்; 2026-ல் ஒக்கலிகா கவுடா வாக்குகள், காந்திராஜனுக்கு 2021-ல் கிடைத்தது போல நிச்சயம் கிடைத்துவிடாது என்கின்றனர் அந்த ஜாதியை சேர்ந்தவர்கள்.
திமுக வேட்பாளராகிறாரா வீரா சாமிநாதன்?
அதே நேரத்தில் வேடசந்தூர் தொகுதியில் சிறுபான்மையினராக இருக்கும் கொங்கு வேளாள கவுண்டர் ஜாதியைச் சேர்ந்த வீரா சாமிநாதனுக்கு முன்னாள், இந்நாள் அமைச்சர்கள் பலம் இருப்பதால் திமுக வேட்பாளராகிவிடுவார்.. இதர ஜாதிவாக்குகளையும் பெறுவார் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.

மகிழ காத்திருக்கும் அதிமுக
அதே நேரத்தில் வீரா சாமிநாதன், திமுக வேட்பாளராக களமிறங்கினால், ஒக்கலிகா கவுடா வாக்குகளை ஒருங்கிணைத்து எளிதாக தாங்கள் வென்றுவிட முடியும் என்கிறது அதிமுகவின் டாக்டர் விபிபி பரமசிவம் தரப்பு.

திமுகவில் அடுத்த வாய்ப்பு யாருக்கு?
இந்த சூழ்நிலையில் காந்திராஜனுக்கு வாய்ப்பு மறுக்கப்படும் நிலையில், ஜாதி அடிப்படையில் வீரா சாமிநாதனின் வேட்பாளர் வாய்ப்பு கேள்விக்குறியானால் திமுக வேட்பாளராக, ஒக்கலிகா கவுடா ஜாதியைச் சேர்ந்த திண்டுக்கல் மேற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கோ. ரவிசங்கர் அல்லது அவரது தாயாரான வேடசந்தூர் ஒன்றிய முன்னாள் பெருந்தலைவர் சவுடீஸ்வரி கோவிந்தன் ஆகியோரில் ஒருவர் திமுக வேட்பாளராக நிறுத்தப்படும் போது போட்டி மிகக் கடுமையாக இருக்கும். ஒரே ஜாதியில் உற்ற உறவினர்களான அதிமுகவின் டாக்டர் விபிபி பரமசிவமும், திமுகவின் ரவி சங்கர் குடும்பமும் மோதும் போது ஒக்கலிகா கவுடா வாக்குகளை யார் அதிகம் பெறுவார்கள்? வெல்வது யார் என்பது கணிப்புகளுக்கு அப்பாற்பட்டதாகவும் இருக்கும் என்கின்றனர் அத்தொகுதியின் சீனியர்கள்.
வேடசந்தூர் சென்டிமெண்ட்
வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் இதுவரை வெற்றி பெற்ற வேட்பாளரின் கட்சிதான் தமிழ்நாட்டில் ஆட்சியை அமைத்துள்ளது.. அந்த வகையில் வேடசந்தூர் தொகுதியின் வேட்பாளர் தேர்வில் அரசியல் தலைமைகள் அனைத்து அம்சங்களையும் கவனத்தில் எடுக்கவே வாய்ப்புகள் அதிகம் என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.