ADVERTISEMENT

குரூப் 4 தேர்வு எழுதியவர்களுக்கு குட் நியூஸ்!

Published On:

| By Kavi

குரூப்-4 தேர்வில் கூடுதல் பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

3935 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஜூலை மாதம் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை நடத்தியது. 11 லட்சத்து 48 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். ஒரு பதவிக்கு சுமார் 287 பேர் போட்டி போடுகின்றனர்.

ADVERTISEMENT

இந்தசூழலில் குரூப் 4 தேர்வில் கூடுதல் பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி நேற்று (செப்டம்பர் 26) வெளியிட்ட அறிவிப்பில், “கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வனக்காப்பாளர், மற்றும் வனக்காவலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான 3935 காலிப்பணியிடங்களை நிரப்ப ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு தொகுதி IV பணிகளுக்கான அறிவிக்கை தேர்வாணையத்தால் 25.04.2025 அன்று வெளியிடப்பட்டது.

ADVERTISEMENT

கூடுதலாக 727 காலிப்பணியிடங்களுக்கான பிற்சேர்க்கை வெளியிடப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்ட மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 4662 ஆகும்.

ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் – தேர்வு IV (தொகுதி IV பணிகள்) மூலம், கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிகளில் (வனக்காப்பாளர், மற்றும் வனக்காவலர் பதவிகள் நீங்கலாக), 2022-ம் ஆண்டு அறிவிக்கையில் மூன்று நிதி ஆண்டுகளுக்கான காலிப்பணியிடங்களும், 2024 ஆம் ஆண்டு அறிவிக்கையில், இரண்டு நிதி ஆண்டுகளுக்கான காலிப்பணியிடங்களும், ஆக மொத்தம் ஐந்து நிதியாண்டுகளுக்கு 17799 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. அதாவது, ஒரு நிதியாண்டிற்கு சராசரியாக 3560 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

2025-ம் ஆண்டு ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் – தேர்வு IV (தொகுதி IV பணிகள்) மூலம், கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிகளில் (வனக்காப்பாளர், மற்றும் வனக்காவலர் பதவிகள் நீங்கலாக), ஒரு நிதியாண்டிற்கு (2025-26) 4456 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிக்கை மற்றும் பிற்சேர்க்கை வெளியிடப்பட்டுள்ளன.

2022 மற்றும் 2024 ஆண்டிற்கான அறிவிக்கைகளில் (வனக்காப்பாளர், மற்றும் வனக்காவலர் பதவிகள் நீங்கலாக) சராசரியாக ஒரு நிதியாண்டிற்கு நிரப்பப்பட்ட காலிப்பணியிடங்களுடன் (3560) ஒப்பிடும்போது, 2025-ம் ஆண்டில் கூடுதலாக 896 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது.

மேலும் 2025-ம் ஆண்டு அறிவிக்கை மற்றும் பிற்சேர்க்கையில் வெளியிடப்பட்ட காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை, அரசுத் துறை நிறுவனங்களிடமிருந்து அதிகரித்து பெறப்படும் பட்சத்தில் கலந்தாய்விற்கு முன்பாக மேலும் அதிகரிக்கப்படும், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share