மேற்குவங்கம் மாநிலம் கொல்கத்தாவில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருவதால் இயல்பு வாழ்க்கை பெருவளவு பாதிக்கப்பட்டுள்ளது.
துர்கா பூஜை சிறப்பாக கொண்டாடப்படும் மேற்கு வங்கத்தில் தலைநகர் கொல்கத்தாவில் பொதுமக்கள் மழையால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். கொல்கத்தாவில் வரலாறு காணாத வகையில் நேற்று இரவு 3 மணிக்கு மேக வெடிப்பு ஏற்பட்டு 185 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அலிப்பூர் பகுதியில் அதிகபட்சமாக 247 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதே சமயம் கொல்கத்தாவின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பல இடங்களில் 250 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழை பதிவாகி உள்ளது.
இதனால் சாலைகளில் வெள்ள நீர் புகுந்து உள்ளது. மழை காரணமாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ, ரயில் நிலையங்களில் வெள்ளம் சூழ்ந்து இருப்பதால் ரயில் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக 30 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
குடியிருப்புகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது. மேலும் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ளம் புகுந்துள்ளது. மருத்துவமனைகளிலும் வெள்ளம் புகுந்துள்ளதால் நோயாளிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர். இந்த நிலையில் மழை காரணமாக மின்சாரம் தாக்கியதில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி 7 பேர் பலியாகி உள்ளனர்.
இந்நிலையில், கனமழை காரணமாக நாளை மற்றும் நாளை மறுதினம் என இரு நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் வரும் செப்டம்பர் 25ஆம் தேதி மற்றொரு புயல் சின்னம் உருவாக வாய்ப்பு உள்ளது என கூறப்பட்டுள்ளது. இதனிடையே வங்கக்கடலில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக மேற்கு வங்கத்தின் தெற்கு மாவட்டங்களில் கன மழை தொடரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
பல்வேறு துர்கா பூஜைக்காக அமைக்கப்பட்ட பந்தல்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் ஏற்பாட்டாளர்கள் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.