கோவையில் செயல்பட்டு வரும் பிளிப்கார்ட் இணைய வழி வணிக நிறுவன முனையத்தில் நூதன முறையில் திருட்டு நடைபெற்ற சம்பவம் அம்பலமாகி உள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கோவையை அடுத்த ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் பிளிப்கார்ட் நிறுவனத்தில் முனையம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். பிளிப்கார்டில் வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்யும் பொருட்களை இங்கிருந்து பார்சல் செய்து வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 27ம் தேதி வாடிக்கையாளர் ஒருவருக்கு அனுப்பப்பட்ட 7 கிலோ வாஷிங் பவுடரை கஸ்டமர் வாங்க மறுத்ததால் திரும்பி வந்தது.
இதனால் சந்தேகம் அடைந்த டீம் லீடர் சேது கபிலோஷ் பார்சலை பிரித்து பார்த்தார். ஆனால் அதில் வாஷிங் பவுடருக்கு பதிலாக விலை உயர்ந்த லேப்டாப் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் பேக்கிங் பிரிவில் இருந்த விக்னேஷ், கிஷோர் குமார், ஶ்ரீ சஞ்சய், சிரஞ்சீவி, யோகேஷ், ஆஸ்லா, முகமது அலி, அஞ்சலி ஆகியோர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இந்த தொழிலாளர்கள் அவர்களே ஆன்லைனில் சோப்பு, வாஷிங் பவுடர், உள்ளிட்ட பொருட்களை ஆர்டர் செய்து விட்டு, அதை பார்சல் செய்யும் போது விலை உயர்ந்த ஐ போன், லேப்டாப் போன்ற பொருட்களை மாற்றி வைத்தது தெரியவந்தது.
இச்சம்பவம் குறித்து பிளிப்கார்ட் நிறுவனத்தில் பணியாற்றும் கண்காணிப்பு அலுவலர் சக்திவேல் செட்டிபாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதையடுத்து விக்னேஷ், கிஷோர் குமார், ஶ்ரீ சஞ்சய், சிரஞ்சீவி, யோகேஷ், ஆஸ்லா, முகமது அலி ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்த விலை உயர்ந்த ஐபோன், லேப்டாப், வாட்ச், ஹெட்போன், ஷூ உள்ளிட்ட சுமார் 10 லட்சம் மதிப்புடைய பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இந்த குற்றச்சம்பவத்தில் தொடர்புடைய அஞ்சலி என்ற பெண் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
