கர்நாடகாவில் கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளில் இருந்து வினாடிக்கு 61,000 கன அடிநீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. Hogenakkal Karnataka Cauvery
தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கபினி அணைகளுக்கு நீர் வரத்து அதிகமாக உள்ளது. இதனால் அணைகளின் நீர்மட்டமும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 61,000 கன அடிநீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
இதனால் கர்நாடகாவில் காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனையடுத்து மாண்டியா மாவட்டத்தில் சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
கர்நாடகா அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட நீர் தமிழக எல்லையான பிலிகுண்டுவை கடந்து ஒகேனக்கல்லில் வெள்ளமாக சீறிப் பாய்கிறது. இதனால் ஒகேனக்கல்லில் பரிசல்கள் இயக்கவும், அருவிகள் மற்றும் ஆற்றில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மேட்டூர் அணையில் இருந்து ஏற்கனவே டெல்டா பாசனத்துக்காக காவிரி நீர் திறந்துவிடப்பட்டு கடை மடை பகுதிகளையும் சென்றடைந்துள்ளது.