கோவை மாவட்டம் வால்பாறை அட்டகட்டி பகுதியில் 6 வயது சிறுவனை கரடி கடித்து கொன்ற சம்பவம் தேயிலை தோட்ட தொழிலாளிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீட்கப்பட்ட சிறுவனின் உடல் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறை அட்டகட்டி அருகே உள்ள வாட்டர் பால் எஸ்டேட் பகுதியில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சர்போத் என்பவர் குடும்பத்துடன் தங்கி தேயிலை தோட்டத்தில் பணி செய்து வருகிறார். இன்று ஆகஸ்ட் 11-ந் தேதி மாலை 5.30 மணி அளவில் தனது 6 வயது மகன் நூருல் இஸ்லாம் என்பவரை அருகில் இருக்கும் கடைக்கு அனுப்பியுள்ளார்.
கடைக்கு சென்ற சிறுவன் நூருல் இஸ்லாம். 6.15 மணி வரை திரும்பாத நிலையில் சிறுவனை தேடியுள்ளனர். அப்போது தேயிலை தோட்டத்தின் அருகில் இருந்த புதருக்குள் சிறுவனின் உடல் இறந்த நிலையில் கிடந்துள்ளது.
சிறுவனின் முகம் முழுவதும் கடித்து குதறப்பட்ட நிலையில் உடல் மீட்கப்பட்டது. முதலில் சிறுத்தை சிறுவனை கடித்து கொன்று இருக்கலாம் என அங்குள்ளவர்கள் நினைத்த நிலையில் , வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மேற்கொண்ட ஆய்வில் கரடி தாக்கியதில் 6 வயது சிறுவன் உயிரிழந்து இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து மீட்கப்பட்ட சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
கடத்த ஜூன் மாதத்தில் டீ எஸ்டேட் ஒன்றில் இதே போல் பெண் குழந்தை ஒன்று சிறுத்தை தாக்கி உயிரிழந்தது. வனவிலங்குகளால் தொழிலாளர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் தேயிலை தோட்ட நிர்வாகங்கள் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து கொடுக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்த பட்டிருந்தது.
மேலும் தேயிலை தோட்டங்களின் அருகில் உள்ள புதர்களை அகற்ற வேண்டும் எனவும் வனத துறை அறிவுறுத்தி இருந்த நிலையில் , தற்போது மீண்டும் ஒரு குழந்தை வனவிலங்கு தாக்குதலில் பலியாகி இருக்கும் சம்பவம் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வேலை தேடி இங்கு வரும் ஏராளமான வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள்
தேயிலைத் தோட்டங்களில் தங்கி பணிபுரியும் நிலையில் , அவர்களது குழந்தைகள் இதுபோல வனவிலங்குகளின் தாக்குதலில் அடுத்தடுத்து சிக்கி உயிரிழப்பு ஏற்படுவது வேதனையளிப்பதாக வன அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.