குடியாத்தம் உட்கோட்டத்தில் ஒரே நாளில் 6 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் உட்கோட்டத்திற்கு உட்பட்ட குடியாத்தம், பேரணாம்பட்டு, கே.வி.குப்பம் உள்ளிட்ட பல பகுதிகளில் முறையாக மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பதாக மாவட்ட ஆட்சியருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து நேற்று (செப்டம்பர் 18) வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவரின் உத்தரவின் பேரில் குடியாத்தம்,கே.வி குப்பம், பேரணாம்பட்டு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த அரசு மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவர்கள் குழு மற்றும் குடியாத்தம் கே.வி.குப்பம் பேரணாம்பட்டு போலீசார் உடன் ரோந்து மற்றும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையின் போது முறையாக மருத்துவம் படிக்காமல் மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்யாமலும் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்த குடியாத்தம் பகுதியை சேர்ந்த பெல்லியப்பன் (51), துக்காராமன் (53), ஜோதிப்பிரியா (40), ரேவதி ( 36), கே வி குப்பம் பகுதியை சேர்ந்த செல்வராஜ் (60), பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்த பாபு(50) உள்ளிட்ட இரண்டு பெண்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து மருந்து, மாத்திரைகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.