திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 இடங்கள் ஒதுக்கப்பட்டதில் மிகுந்த மகிழ்ச்சி இல்லைதான்; ஆனால் கூட்டணிக்காக தியாகம் செய்தாக வேண்டும் என்று அக்கட்சியின் மேலிட பொறுப்பாளரும் பேச்சுவார்த்தை குழுவின் தலைவருமான கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 சட்டசபை தொகுதிகளும் 1 ராஜ்யசபா இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் இன்று மார்ச் 4-ந் தேதி கையெழுத்திட்டனர்.
இந்த ஒப்பந்தம் கையெழுத்தான பின்னர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய செல்வப் பெருந்தகை, எங்களுக்கு முழு மகிழ்ச்சி என்று தெரிவித்திருந்தார்.
இதனிடையே ANI செய்தி நிறுவனத்துக்கு கிரிஷ் சோடங்கர் அளித்த பேட்டியில், 28 இடங்கள் ஒதுக்கீடு செய்ததில் பெரிய மகிழ்ச்சி இல்லைதான்.. இருப்பினும் கூட்டணிக்காக தியாகம் செய்துள்ளோம் என கூறியுள்ளார்.
ANI செய்தி நிறுவனத்துக்கு கிரிஷ் சோடங்கர் அளித்த பேட்டி: எங்களுடைய பலமே எங்களது தலைமைதான். தமிழ்நாட்டில் ராகுல் காந்திக்கு மிகப்பெரிய ஆதரவு உள்ளது. எங்களது கட்சிக்கு தமிழ்நாட்டின் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் ஏராளமான நலம் விரும்பிகளும் ஆதரவாளர்களும் உள்ளனர். ஒவ்வொரு தொகுதியிலும் அர்ப்பணிப்புள்ள வாக்காளர்களையும், தொண்டர்களையும், நலம் விரும்பிகளையும் நீங்கள் காணலாம். இது இந்தக் கூட்டணிக்குக் கூடுதல் பலத்தை சேர்க்கிறது.
எங்களது வாக்கு சதவீதம் 14% க்கும் அதிகமாக உள்ளது; சில நேரங்களில் அது 20% வரை கூட அதிகரிக்கலாம். இது தவிர, அனைத்து நிலைகளிலும் நாங்கள் கிராம கமிட்டிகளையும் அமைத்துள்ளோம். எங்களுடைய பூத் கமிட்டிகளும், பி.எல்.ஏ-க்களும் தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் மிகத் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர். இதுவும் கூட்டணிக்கு வலு சேர்க்கும்.
உள்ளாட்சித் தேர்தல்கள்- அதிகாரப் பகிர்வு
இந்தக் கூட்டணியின் மிகப்பெரிய பலமாகவோ அல்லது திருப்தியாகவோ நான் கருதுவது, உள்ளாட்சித் தேர்தல்களில் பல்வேறு நிலைகளில் எங்களது உள்ளூர் தலைவர்கள் பங்கேற்பதும், உள்ளூர் அளவில் ஆட்சியில் பங்கு பெறுவதும்தான். இதுதான் எங்களது மிகப்பெரிய சாதனை.
முதல் முறையாக நாங்கள் எங்களது தொண்டர்கள் மீது கவனம் செலுத்தியுள்ளோம், ஏனெனில் அவர்கள் ஆட்சியின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம். இதற்காக நாங்கள் வலுவான கோரிக்கையை முன்வைத்தோம், திமுக தலைமையும் இதைத் தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது.
திமுக கூட மகிழ்ச்சியாக இருக்காது
எங்களிடம் ஒரு பெரிய விருப்பப் பட்டியல் இருந்தது. ஆனால் ஒரு கூட்டணியில் இருக்கும்போது, நீங்கள் நினைத்த அனைத்தும் உங்களுக்குக் கிடைக்காது. திமுக உட்பட இந்தக் கூட்டணியில் உள்ள எந்தக் கட்சியும் முழுமையாக மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. யாரும் திருப்தியாக இருக்க முடியாது, ஏனெனில் ஒரு கூட்டணி அமையும்போது அங்கு சில தியாகங்கள் செய்யப்பட வேண்டும்.
பெரிய மகிழ்ச்சி இல்லைதான்.. இருந்தாலும்
ஒன்றிணைந்து செயல்பட அனைத்துக் கட்சிகளுமே சில தியாகங்களைச் செய்துள்ளன, நாங்களும் தியாகம் செய்துள்ளோம். எங்களுக்குப் பெரிய எதிர்பார்ப்புகள் இருந்தன, ஆனால் ஒரு பெரிய கூட்டணி என்று வரும்போது அனைத்து எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்ய முடியாது. எங்களுக்குக் கிடைத்துள்ள 28 என்ற எண்ணிக்கையில் எங்களுக்குப் பெரிய மகிழ்ச்சி இல்லைதான், ஆனால் நாங்கள் தியாகம் செய்துதான் ஆக வேண்டும். இவ்வாறு கிரிஷ் சோடங்கர் கூறினார்.
