மணல் குவாரி மோதல் வழக்கில் இருந்து அமைச்சர் சிவசங்கர் உள்ளிட்ட 27 பேரையும் விடுவித்து கடலூர் நீதிமன்றம் இன்று (அக்டோபர் 13) உத்தரவிட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் ஆவினன்குடி என்ற இடத்தில் மணல் திருட்டுக்கு எதிராகக் கடந்த 2015ஆம் ஆண்டு போராட்டம் நடைபெற்றது.
அந்த போராட்டம் இப்போதைய போக்குவரத்துத்துறை அமைச்சரும், அப்போது குன்னம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமாக இருந்த சிவசங்கர் தலைமையில் நடைபெற்றது.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.
இதனையடுத்து பொதுச் சொத்துக்குச் சேதம் விளைவித்தது என வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கடலூர் நீதிமன்றத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக அமைச்சர் சிவசங்கர் இன்று கடலூர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்படாததால் குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர் சிவசங்கர் உட்பட 27 பேரையும் விடுவித்து உத்தரவிட்டார்.