ரஜினிகாந்தின் கூலி திரைப்படத்தில் 2 விண்டேஜ் பாடல்களை பயன்படுத்தியுள்ளது ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது.
மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான லோகேஷ் கனகராஜ், அதன்பின்னர் கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ படங்களின் வெற்றியால் இந்திய அளவில் கவனம் ஈர்த்து வருகிறார்.
தற்போது அவர் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஆமீர்கான், நாகர்ஜுனா, உபேந்திரா ஆகியோர் இணைந்து நடித்துள்ள கூலி திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது.
பொதுவாக லோகேஷ் கனகராஜ் படங்கள் என்றாலே எதிர்பார்ப்புகள் எழும். அதிலும் குறிப்பாக அவர் தனது படங்களில் பயன்படுத்தும் விண்டேஜ் பாடல் ரசிகர்களால் கவனிக்கப்பட்டு பாராட்டப்பட்டு வருகின்றன.
குறிப்பாக லோகேஷ் கனகராஜின் இரண்டாவது படமான கைதி படத்தில் ’ஜும்பலகா ஜும்பலகா’ மற்றும் ’ஆசை அதிகாம் வச்சு’ ஆகிய பாடல்களைப் பயன்படுத்தியிருந்தார்.
விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் இளையராஜாவின் புது நெல்லு புது நாடு படத்தில் வரும் ’கருத்த மச்சான்’ பாடல் பின்னணியில் ஒலித்தது.
லோகேஷ் தனது அபிமான நடிகரான கமல்ஹாசனை வைத்து இயக்கிய விக்ரம் திரைப்படத்தில், 1995 ஆம் ஆண்டு வெளியான அசுரன் படத்திலிருந்து ’சக்கு சக்கு வத்திகுச்சி’ என்ற பாடலைப் பயன்படுத்தினார். இந்த பாட்டிற்கு திரையரங்குகளில் கொடுத்த வரவேற்பு பலருக்கும் ஞாபகம் இருக்கலாம்.
அதே போன்று மீண்டும் விஜய்யை வைத்து இயக்கிய லியோ படத்தில் இடம்பெற்ற கஃபே சண்டைக்காட்சிக்கு ’கருகரு கருப்பாயி பாடலை’ பயன்படுத்தியதை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர்.
இதனையடுத்து யூடியூப், ஸ்பாடிஃபை போன்ற தளங்களில் ‘லோகேஷ் கனகராஜ் விண்டேஜ் பாடல்கள்’ என பல ஆல்பங்கள் வெளியாகின.
இதனால் சூப்பர் ஸ்டாரை வைத்து இயக்கியுள்ள கூலி திரைப்படத்தில் அவர் என்ன விண்டேஜ் பாடலை பயன்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. ஆனால் அந்த பாடல் குறித்து படக்குழுவினர் எந்த கருத்தையும் வெளியிடாமல் ரகசியம் காத்து வந்தனர்.
இந்த நிலையில் கூலி திரைப்படம் இன்று வெளியான நிலையில் அந்த சீக்ரெட் உடைந்துள்ளது.
இப்படத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான தங்கமகன் திரைப்படத்திற்காக இளையராஜா இசையமைத்த ‘வா வா பக்கம் வா’ என்கிற சூப்பர் ஹிட் விண்டேஜ் பாடலை தான் லோகி, கூலி படத்தில் பயன்படுத்தி இருக்கிறார்.
அதே போன்று படத்தின் ஒரு சண்டைக்காட்சியில் பிரசாந்த் நடிப்பில் வெளிவந்த கல்லூரி வாசல் திரைப்படத்தில் இடம்பெற்ற ’லெயோலா காலேஜ் லைலா’ பாடலை பயன்படுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக விண்டேஜ் பாடல்கள் குறித்து லோகேஷ் அளித்த பேட்டியில், “கூலி எழுதும் போது, ஒரு குறிப்பிட்ட பாடலைப் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருந்தது.. பாடலின் உரிமையை கூட நாங்கள் வாங்கினோம்.. விஷயம் என்னவென்றால், நான் அதைப் பயன்படுத்த வேண்டுமா இல்லையா என்பதுதான்.. ரெட்ரோ பாடல்களுக்கான அந்த உற்சாகம் பார்வையாளர்களுக்கு இன்னும் இருக்கிறதா இல்லையா என்பதை நான் அறிய விரும்புகிறேன்.. இல்லையென்றால், அனிருத்தின் பாடலைக் கொண்டு என்னைக் காப்பாற்றச் சொல்வேன்” என தயக்கத்துடன் பேசியிருந்தார்.
எனினும் இப்படத்தில் இரண்டு விண்டேஜ் பாடல்களை பயன்படுத்தி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளார் லோகேஷ்.