சென்னையில், அரசு பள்ளியில் படிக்கும் 15 மற்றும் 13 வயது மாணவிகளிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட 2 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காட்டாங்குளத்தூர் அருகே முருகமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் தினேஷ் (22) மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த ஏசி மெக்கானிக் தினேஷ் (23) ஆகிய இருவரும், 2 மாதங்களுக்கு முன்பு சமூக வலைதளம் வாயிலாக சிறுமிகளுடன் நட்பு ஏற்படுத்தினர். நல்ல வேலையில் இருக்கிறோம் என்று நம்ப வைத்து, காதலிப்பதாக கூறி மாணவிகளிடம் பழகினர்.
இதையடுத்து ஸ்மார்ட்போன்கள் மூலம் அடிக்கடி தொடர்பில் இருந்து, சிறுமிகளை மகாபலிபுரம் அருகே கயாறு பகுதியில் உள்ள பாழடைந்த குடியிருப்பு வளாகத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி, சிறுமிகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து, அவற்றை வெளியில் காட்டி விடுவோம் என மிரட்டி தொடர்ந்து வன்கொடுமை செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில், 15 வயது மாணவி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டதால், தாயார் மாணவியை மருத்துவரிடம் அழைத்துச் சென்றார். பரிசோதனையில் மாணவி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. விசாரணையில், சகோதரிகள் இருவரும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை குறித்து தெரிவித்தனர்.
இதையடுத்து, தாயார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் போக்ஸோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து,குற்றம் செய்த இருவரையும் கட்டண்குளத்தூரில் வைத்து கைது செய்தனர். பின்னர் செங்கல்பட்டு போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், அவர்களை நீதிமன்றக் காவலில் அடைத்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட மாணவிகள் மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.