ஜார்கண்ட் மாநிலத்தில் கன்வார் பக்தர்கள் சென்ற பேருந்தும், கேஸ் சிலிண்டர் ஏற்றி வந்த லாரியும் (Kanwar Devotees- Jharkhand Accident) மோதி விபத்துக்குள்ளானதில் 18 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஜார்கண்ட் மாநிலம் மோகன்பூர் காவல்நிலையத்திற்கு உட்பட்ட ஜமுனியா வனப்பகுதி அருகே இன்று ஜூலை 29-ந் தேதி அதிகாலை 4.30 மணியளவில் கன்வார் பக்தர்கள் பேருந்து ஒன்றில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த கேஸ் சிலிண்டர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த கன்வார் பக்தர்கள் 18 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் சிலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினரும், மீட்புக்குழுவினரும் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் சிகிச்சைக்கான அனுமதிக்கப்பட்ட சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்து நடந்த தியோகர் தொகுதி எம்.பி நிஷிகாந்த் துபே தனது சமூக வலைத்தள பதிவில், “என் தியோகர் தொகுதியில் ஷ்ரவண மாதத்தில் கன்வார் யாத்திரையின் போது பஸ் மற்றும் லாரி மோதியதில் 18 பேர் பலியாகி உள்ளனர். அவர்களின் குடும்பத்தினருக்குத் துயரத்தை தாக்கும் வலிமையை பாபா பைத்யநாத்ஜி வழங்கட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.