பள்ளிப் பாடத்திட்டத்தை உருவாக்கும் இடத்திலேயே இப்படியா? NCERTயில் 1,600 காலிப்பணியிடங்கள்… அதிர்ச்சித் தகவல்!

Published On:

| By Santhosh Raj Saravanan

1600 posts vacant in NCERT

“நீட் (NEET), ஜெஇஇ (JEE) தேர்வில் பாஸ் பண்ணனுமா? கண்ணை மூடிக்கிட்டு என்சிஇஆர்டி (NCERT) புத்தகங்களைப் படிங்க” – இதுதான் நாடு முழுவதும் உள்ள அத்தனை கோச்சிங் சென்டர்களும் மாணவர்களுக்குக் கொடுக்கும் அட்வைஸ். ஆனால், மாணவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் அந்தப் புத்தகங்களை உருவாக்கும் நிறுவனத்திலேயே, வேலை செய்ய ஆட்கள் இல்லை என்ற அதிர்ச்சித் தகவல் இப்போது வெளியாகியுள்ளது.

மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சிலில் (NCERT), சுமார் 1,600க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாகக் கிடப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ADVERTISEMENT

காலியாகும் நாற்காலிகள்:

NCERT என்பது ஏதோ புத்தகத்தை அச்சடிக்கும் நிறுவனம் மட்டுமல்ல; அது இந்தியாவின் கல்வித் தரத்தை நிர்ணயிக்கும் ‘மூளை’ போன்றது. ஆனால், அங்குள்ள நிலவரம் கவலைக்கிடமாக உள்ளது.

ADVERTISEMENT
  • கல்விப் பணியிடங்கள் (Academic Posts): பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள் எனப் பாடம் மற்றும் ஆய்வு சார்ந்த பணிகளில் மட்டும் சுமார் 45% இடங்கள் காலியாக உள்ளன. அதாவது, இருக்க வேண்டிய ஆட்களில் பாதிப்பேர் கூட இல்லை.
  • நிர்வாகப் பணியிடங்கள் (Non-Academic): அலுவலகப் பணிகளைக் கவனிக்கும் பிரிவிலும் சுமார் 40% இடங்கள் நிரப்பப்படாமலேயே கிடக்கின்றன.

எப்படி ஓடுகிறது வண்டி?

“நிரந்தரப் பணியாளர்கள் இல்லைனா என்ன? ஒப்பந்த ஊழியர்களை (Contractual Staff) வச்சு வண்டியை ஓட்டுவோம்” என்ற பாணியில்தான் தற்போது NCERT இயங்கி வருகிறது. முக்கியமான ஆய்வுப் பணிகள், புதிய பாடத்திட்ட வடிவமைப்பு (Curriculum Framework) போன்ற சீரியஸான வேலைகளுக்குக் கூட, போதிய அனுபவம் வாய்ந்த நிரந்தரப் பேராசிரியர்கள் இல்லாதது பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

ஏன் இந்த நிலை?

ஓய்வு பெறும் (Retirement) வேகத்திற்கு ஏற்ப, புதிய ஆட்களைத் தேர்வு செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட நாட்களாகவே உள்ளது. தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை எடுத்துத் தட்டுத்தடுமாறி வேலைகளை முடிப்பதாகக் கூறப்படுகிறது.

கல்வியாளர்களின் குமுறல்:

“தேசிய கல்விக் கொள்கை (NEP 2020) அமலுக்கு வந்துள்ள இந்த முக்கியமான நேரத்தில், பள்ளிக்கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டிய NCERTயே இப்படி ஆட்கள் பற்றாக்குறையில் தள்ளாடுவது ஆபத்தானது. ஒப்பந்த ஊழியர்களை நம்பி, நீண்ட காலத் திட்டங்களை எப்படிச் செயல்படுத்த முடியும்?” என்று கல்வியாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதே வகுப்பறைகள் தான். அந்த வகுப்பறைகளுக்கு வழிகாட்டும் NCERT நிறுவனத்தை வலுப்படுத்த வேண்டியது மத்திய அரசின் கடமை. ‘ஆட்கள் பற்றாக்குறை’ என்ற காரணத்தைக் காட்டி கல்வியின் தரத்தில் சமரசம் செய்துகொள்வது, மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடுவதற்குச் சமம். உடனடியாக நிரந்தரப் பணியாளர்களை நியமிக்க மத்திய கல்வி அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share