Muthukku Muthaaga Movie
ஆடல், பாடல், மோதல், காதல், சிரிப்பு என்று கொண்டாட்டமும் குதூகலமுமாக இருக்கும் திரைப்படங்களைப் போலவே சோகத்தையும் அழுகையையும் பெருக்கெடுக்கச் செய்யும் படைப்புகளும் ரசிகர்களைக் கவர்ந்திழுத்திருக்கின்றன. அறுபதுகள், எழுபதுகளில் அப்படிப் பல திரைப்படங்கள் வந்திருக்கின்றன. பார்வையாளர்கள் கண்களில் ஆற்றை ஊற்றுவித்து, திரையரங்கைக் கண்ணீர் கடலாக மாற்றியிருக்கின்றன.
எண்பது, தொண்ணூறுகளில் அப்படிப்பட்ட திரைப்படங்களின் வரத்து ஒருகட்டத்தில் அந்த எண்ணிக்கை சொற்பமாகிவிட்டது. ஆனாலும், சிலர் விடாப்பிடியாக அப்படிப்பட்ட திரையனுபவத்தைத் தந்துகொண்டுதான் இருக்கின்றனர்.

அவற்றுள் ஒன்றாகத் திகழ்கிறது, 2011இல் வெளியான ‘முத்துக்கு முத்தாக’. இதனை இயக்கியவர் மறைந்த இயக்குனர் ராசு மதுரவன். Muthukku Muthaaga Movie
பாசத்தை மையப்படுத்திய கதை!
ஒரு ஏழை தம்பதி. அவர்களுக்கு ஐந்து மகன்கள். கஷ்டப்பட்டு அவர்களை வளர்த்து ஆளாக்குகின்றனர். ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக வாழ்வில் ‘செட்டில்’ ஆகின்றனர். செய்யும் தொழில், வருமானம், வாழ்க்கைச்சூழல் என்று எல்லாமே வெவ்வேறு மாதிரியாக இருக்கின்றன. கடைசி இரு பிள்ளைகள் வேலைக்குச் செல்வதற்கு முன்பான பருவத்தில் இருக்கின்றனர்.
பெற்றோர்கள் முதல் மூன்று மகன்களுக்கு அடுத்தடுத்து திருமணம் செய்து வைக்கின்றனர்.
அந்த தாய் தனது சிறு வயது தோழியின் மகளுக்கு மூத்த மகனைத் திருமணம் செய்து வைக்கிறார்.
இரண்டாவது மகன் காதலிக்கும் பெண் வசதியான வீட்டைச் சேர்ந்தவர் என்றாலும், அவரை வீட்டோடு மாப்பிள்ளையாக்க வேண்டும் என்ற சம்பந்திகளின் ஆசைக்குச் செவி சாய்க்கின்றனர் அந்தப் பெற்றோர். Muthukku Muthaaga Movie
மூன்றாவது மகன் ஒரு பெண்ணை மனதார விரும்புவதை அறியாமல், ‘சொந்தம் விட்டுப் போய்விடக்கூடாது’ என்று அந்த தந்தை தனது தங்கையின் மகளை மருமகளாக ஏற்கிறார்.
மூவர் குடும்பத்தோடும் அந்த தம்பதியரால் சேர்ந்து வசிக்க முடியாமல் போகிறது.
நான்காவது மகன் சந்தர்ப்பவசத்தால் ஒரு கொலைக்குற்றத்திற்காகச் சிறை செல்கிறார். ஐந்தாவது மகன் நல்லதொரு ஐடி நிறுவனத்தில் வேலை பார்ப்பதற்காகப் பெருநகரத்திற்குச் சென்றுவிடுகிறார்.

தனிமையில் தவிக்கும் அந்த முதிய தம்பதி வறுமையோடும் நோய்நொடியோடும் போராட முடியாமல் என்ன செய்தார்கள் என்பதோடு முடிவடையும் ‘முத்துக்கு முத்தாக’.
முழுக்கப் பாசத்தை மையப்படுத்திய படம் இது. ‘இப்பல்லாம் சென்டிமெண்ட் எப்படி எடுபடும்’ என்று அனிச்சையாய் வார்த்தைகள் உதிர்ப்பவர்கள் பின்மண்டையில் தட்டிய படமிது.
படம் வெளியாகிப் பதினான்கு ஆண்டுகள் ஆனபிறகும், அது உருவாக்கும் தாக்கத்தில் எந்த மாற்றமும் இல்லை. Muthukku Muthaaga Movie
யதார்த்தத்தில் ‘செயற்கைத்தனம்’! Muthukku Muthaaga Movie
‘முத்துக்கு முத்தாக’ படத்தில் ‘செட்’ இல்லாமல் யதார்த்தமான லொகேஷன்களே காட்டப்பட்டிருக்கும். நடிப்புக்கலைஞர்களும் பெரிதாக ஒப்பனையில்லாமல் நடமாடியிருப்பார்கள். ஆனாலும், திரைக்கதையில் இருக்கும் ‘நாடகத்தனம்’ அந்த யதார்த்தத்தை மீறிய செயற்கைத்தனமாகத் தெரியும்.
முதல் மற்றும் மூன்றாவது மருமகள்களாக வருபவர்களின் நடிப்பும், இரண்டாவது மகனின் மாமனார் மாமியாராக வருபவர்களின் இருப்பும் சீரியல் பார்க்கும் உணர்வை ஏற்படுத்தும்.
மூன்றாவது மகனின் காதல் தோல்வியில் முடியும். அவரைக் காதலித்த பெண், அவரது நினைவாகவே வாழ்வார். Muthukku Muthaaga Movie
நான்காவது மகன் தனக்குத் தெரிந்த ஒரு இளைஞரைக் கொலை செய்யத் துணிவார். அதற்கான காரணமும் குடும்ப உறவு சார்ந்ததாகவே இருக்கும்.
பெற்றோரிடம் பாசம் இருந்தாலும், வாழ்வில் செட்டில் ஆனபிறகு அவர்களைத் தன்னோடு அழைத்துச் செல்லும் முடிவில் அந்த கடைசி மகன் இருப்பார்.
இப்படத்தில் இப்படி அதீதமாகத் தெரிகிற ‘செயற்கைத்தனங்கள்’ நிறைய உண்டு.
உண்மையைச் சொன்னால், அப்படிப்பட்ட மனிதர்கள், சூழல்களை இன்றும் இதில் வரும் கதைமாந்தர்கள் போலச் சிலர் எதிர்கொண்டு வருகின்றனர். இனிமேலும் அது தொடரலாம்.
’அங்கொன்றும் இங்கொன்றுமாக நிகழ்கிற இந்த சம்பவங்களை ஒரு கதையாக்கியது நிச்சயம் ‘ட்ராமா’தான். ஆனாலும், அதுவே ஒரு திரைப்படக் கதையாக உருவாக்கப்படும்போது அந்த உலகத்தினுள் நாம் ஒரு அங்கமாவோம்’. அப்போது கதாபாத்திரங்கள் எதிர்கொள்கிற வலியையும் வேதனையையும் தங்களுடையதாக பார்வையாளர்கள் உணர்வார்கள்.

அதனை ‘முத்துக்கு முத்தாக’ படத்தில் சாதித்திருந்தார் இயக்குனர் ராசு மதுரவன்.
இப்படத்தில் பல காட்சிகள் கண்ணில் தாரை தாரையாக நீரை ஊற்றெடுக்க வைப்பதாக இருக்கும். எத்தனை முறை பார்த்தாலும் அது நிகழும் என்பதுதான் சிறப்பு.
நஞ்சு கலந்த உணவை மனைவி தருகிறார் என்று உணர்ந்ததும், அவரது முகத்தைக் கூர்மையாகப் பார்த்துவிட்டுச் சிரிப்பார் அந்தக் கணவர். அவருக்கு உண்மை தெரிந்துவிட்டது என்றறிந்து, அவரை எதிர்கொள்ள முடியாமல் தவிப்பார் அந்த மனைவி. அக்காட்சியில் இளவரசு, சரண்யாவின் நடிப்பு பிரமிக்க வைக்கும்.
போலவே இதில் நடித்த நட்டி, விக்ராந்த், வீரசமர், ஓவியா, மோனிகா, சிங்கம்புலி, ராஜ்கபூர், சுஜிபாலா, வர்ஷினி, ஜானகி உள்ளிட்ட பலருக்கும் இப்படம் நினைவில் கொள்ளத்தக்கதாக இருக்கும். Muthukku Muthaaga Movie
பாத்திரங்களின் உணர்வெழுச்சிக்கு முக்கியத்துவம் தரும் வகையில் யு.கே.செந்தில்குமாரின் ஒளிப்பதிவு அமைந்திருக்கும். குறைந்த பட்ஜெட்டில் ஓரளவு நம்பத்தகுந்த வகையில் இதில் சண்டைக்காட்சிகளை வடிவமைத்திருப்பார் சுப்ரீம் சுந்தர். கவி பெரியதம்பியின் இசையில் பாடல்கள் மனதைத் தொடுவதாக அமைந்திருக்கும்.
இப்படிச் சிறப்புகள் பல கொண்ட ‘முத்துக்கு முத்தாக’ குடும்பச் சித்திரங்களில் ஒரு குறிப்பிடத்தக்க படமாக மாறியிருப்பதில் ஆச்சர்யம் ஏதுமில்லை.

இப்படம் வெளிவந்த காலகட்டத்தில் இயக்குனர் ராசு மதுரவன் குறித்தும், படத்தின் உள்ளடக்கம் குறித்தும் பலவாறாக விமர்சனங்கள் வந்திருக்கின்றன. ஆனால், அதில் சொல்லப்பட்ட குறைகளைப் புறந்தள்ளும் அளவுக்கு இப்படம் சிறப்பானதொரு திரையனுபவத்தைத் தரும் என்பதில் சந்தேகம் தேவையில்லை.
’முத்துக்கு முத்தாக’ ரெஃபரன்ஸ்! Muthukku Muthaaga Movie
இப்படத்திற்கு ‘முத்துக்கு முத்தாக’ என்று டைட்டில் வைக்கக் காரணம் ‘அன்பு சகோதரர்கள்’ என்ற படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல். ‘முத்துக்கு முத்தாக சொத்துக்கு சொத்தாக அண்ணன் தம்பி பிறந்து வந்தோம் கண்ணுக்கு கண்ணாக’ என்றிருக்கும் அப்பாடலை கண்டசாலா பாடியிருப்பார். அவரது தமிழ் உச்சரிப்பு கேள்விக்குட்பட்டது என்றபோதும், அவரது குரல் மூலமாக உருவாக்கும் உணர்வெழுச்சிக்கு நிகர் ஏதுமில்லை. அந்த திரைப்படம் கூட, நான்கு சகோதரர்களைப் பற்றியதுதான். ஆனால், ‘படையப்பா’ டைப்பில் அதில் ஒரு வில்லியின் பாத்திரமும் இடம்பெற்றிருக்கும். Muthukku Muthaaga Movie
அந்த படத்தையும் பாடலையும் முன்னுதாரணமாகக் கொண்டு, ‘வானத்தைப் போல’ உட்பட எத்தனையோ படங்கள் வந்திருக்கக் கூடும். ஆனால், அந்த படத்திற்கும் பாடலுக்கும் மரியாதை செய்யும் வகையில் அமைந்த இப்படம் காலமெல்லாம் இயக்குனர் ராசு மதுரவனின் பெயரைச் சொல்லும். Muthukku Muthaaga Movie