திருநெல்வேலியில் தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு இன்று ஆகஸ்ட் 3-ந் தேதி இரவு பிரம்மாண்டமான சைவ விருந்து அளிக்கப்படுகிறது.
தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள எடப்பாடி பழனிசாமி நேற்று ஆகஸ்ட் 2-ந் தேதி இரவு நெல்லை மாவட்டத்துக்கு வருகை தந்தார்.
நெல்லை மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இன்று ஆகஸ்ட் 3-ந் தேதி பிரசாரம் செய்கிறார். இந்த பிரசாரம் முடிவடைந்த பின்னர் இரவு 7 மணிக்கு நெல்லை எல்.ஐ.சி. காலனியில் உள்ள தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இல்லத்தில் பிரம்மாண்ட சைவ விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த விருந்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள், மூத்த தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக மூத்த தலைவர்கள் தமிழிசை சவுந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் இந்த விருந்தில் பங்கேற்கின்றனர்.
நயினார் நாகேந்திரன் வீட்டில் நடைபெறும் இந்த விருந்தில் 109 வகையான உணவுகள் பரிமாறப்பட இருக்கின்றன. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அத்துடன் இந்த விருந்துக்காக நயினார் நாகேந்திரன் வீடு மற்றும் அதை சுற்றிய பகுதிகளில் அலங்கார வளைவுகள், அலங்கார பந்தல்களும் அமைக்கப்பட்டுள்ளன.
சூப்கள், ஸ்டார்ட்டர்கள், சாக்லேட் வகைகள், 17 வகையான இனிப்புகள், பூண்டு குழம்பு, சிவப்பு சம்பா இடியாப்பம்- நெல்லை சொதி உள்ளிட்டவை இந்த 109 வகை உணவுகளில் இடம் பெற்றுள்ளன. அதிமுக- பாஜக தொண்டர்களும் இந்த விருந்தில் பங்கேற்கின்றனர்.
முன்னதாக, திருநெல்வேலியில் தமது இல்லத்தில் கடந்த ஜூலை 26-ந் தேதி தமிழக பாஜக தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு பிரம்மாண்ட விருந்து அளித்தார் நயினார் நாகேந்திரன் என்பதும் குறிப்பிடத்தக்கது.