மதுரையில் தவெக மாநாடு நடைபெறும் இடத்தில் 100டிகிரி பாரன்ஹீட்டுக்கு அதிகமாக வெயிலின் தாக்கம் உள்ளதால் தொண்டர்கள் அவதியடைந்துள்ளனர்.
மதுரை பாரபத்தியில் இன்று (ஆகஸ்ட் 21) தவெக இரண்டாவது மாநாடு நடைபெறுகிறது. இன்னும் சற்று நேரத்தில் விஜய் மேடைக்கு வருகைத் தரவுள்ளார்.
இதற்கிடையே நேற்று நள்ளிரவு முதலே மாநாட்டுக்கு தொண்டர்கள் வரத் தொடங்கினர். இந்த மாநாட்டுக்கு வயதானவர்கள், கர்ப்பிணிகள் வரவேண்டாம். குழந்தைகள், பள்ளி மாணவர்களை அழைத்து வர வேண்டாம் என்று விஜய் அறிவுறுத்தியபோதும், சிலர் பச்சிளம் குழந்தைகளை கூட தூக்கி வந்துள்ளனர்.
குழந்தைகள் அளும் சத்தம் மாநாட்டு திடலில் கேட்கின்றன. அப்படி குழந்தைகளுடன் வந்த பெற்றோர்கள தவெக நிர்வாகிகள் நிழல் பகுதிக்கு அழைத்துச் சென்று தண்ணீர் உள்ளிட்டவற்றை வழங்கினர்.
அதேசமயம் வெயில் அதிகமாக இருப்பதால், மாநாட்டு திடலில் கீழே போட்டிருந்த தரை விரிப்புகளை கிழத்து சிலர் தற்காலிக கூடாரம் போல் அமைத்து உட்கார்ந்திருக்கின்றனர்.
சிலர், நாற்காலிகளை தலைக்கு மேல் தூக்கி பிடித்தவாறு அமர்ந்திருக்கின்றனர். பலரும் குடையுடன் வந்துள்ளனர்.
மாநாட்டையொட்டி பாரபத்தியில் தற்காலிக கடைகள் முளைத்துள்ளன. அங்கு அதிக விலைக்கு உணவு பொருட்கள் விற்கப்படுவதாக மாநாட்டுக்கு வரும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மூன்று கரண்டி சாப்பாடு 100 ரூபாய், ஒரு சொம்பு கூழ் 40 ரூபாய் என அதிக விலைக்கு விற்கப்படுவதால் மக்கள் சிரமப்படுவதாகவும் தகவல்கள் வருகின்றன.
மற்றொரு பக்கம் தவெக சார்பில் தண்ணீர் பாட்டில், ஸ்நாக்ஸ் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. எனினும் கூட்டம் அதிகமாக இருப்பதால், அனைவருக்கும் இவை கிடைக்கவில்லை.
இந்தநிலையில் தவெகவினர் ட்ரோன்கள் மூலம் ஃபர்ஸ்ட் எய்டு பாக்ஸ், தண்ணீர் பாட்டில் வழங்கி வருகின்றனர். வெயிலால் தவிக்கும் தொண்டர்கள் மீது ட்ரோன்கள் மூலம் தண்ணீரை மழை சாரல் போல் தெளித்து வருகின்றனர்.
இத்தனை சிரமங்களுக்கு மத்தியிலும் தவெக தொண்டர்கள் வருகைத் தந்து கொண்டிருக்கின்றனர். மதுரை – தூத்துக்குடி நெடுஞ்சாலையில் சுமார் 20 கிமீ தூரத்துக்கும் மேல் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. போக்குவரத்து நெரிசலால் வளையங்குளம் பகுதியில் தவெகவினர் வாகனங்களுக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
தற்போது வரை சுமார் 1.50 லட்சம் பேர் வந்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.