ஆந்திராவில் கோயிலுக்கு சென்றபோது கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரப் பிரதேச மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டம், காசிபுக்காவில் புகழ்பெற்ற வெங்கடேஸ்வரா சுவாமி கோவில் உள்ளது. நாகாவலி ஆற்றங்கரையில் அமைந்துள்ள இந்த கோவிலில் ஏகாதசி போன்ற நாட்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.
அந்தவகையில் இன்று (நவம்பர் 1) சனிக்கிழமை ஏகாதசி நாளை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.
அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 10 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கார்த்திகை ஏகாதசியை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே வெங்கடேஸ்வரா சுவாமி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சுவாமி தரிசனம் செய்வதற்காக ஏராளமானோர் ஒரே நேரத்தில் குவிந்ததால், கோவில் வளாகத்திற்கு வெளியே உள்ள நுழைவு வாயிலில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு கூட்ட நெரிசல் உருவானது.
இதில் மூச்சுத்திணறியும், கீழே விழுந்து மிதிபட்டும் 10 பக்தர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், பல பக்தர்கள் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், காவல்துறையினர் மற்றும் மீட்புப் படையினர் விரைந்து வந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.
இந்த துயரச் சம்பவம் குறித்து ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடு அதிர்ச்சியையும், ஆழ்ந்த வருத்தத்தையும் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததுடன், காயமடைந்தவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். நிலைமையை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறும், நிவாரணப் பணிகளை துரிதப்படுத்துமாறும் உள்ளூர் நிர்வாகத்தினருக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியும் இச்சம்பவத்தால் மிகுந்த வேதனை அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 ரூபாயும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, ஆந்திரப் பிரதேச ஆளுநர் எஸ். அப்துல் நசீர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரும் இச்சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஆந்திராவில் பக்தர்களுக்கு ஏற்பட்ட இதுபோன்ற துயரச் சம்பவங்கள் இது முதல் முறையல்ல.
கடந்த ஜனவரி 2025-ல் திருமலையில் உள்ள வெங்கடேஸ்வரா கோவிலில் வைகுண்ட துவார சர்வ தரிசன டோக்கன்களுக்கான கூட்ட நெரிசலில் சிக்கி 6 பக்தர்கள் உயிரிழந்தனர்.
, 2015 ஜூலையில் ராஜமுந்திரியில் கோதாவரி புஷ்கரம் திருவிழாவின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 29 பேர் பலியாகினர்.
இதுபோன்ற சம்பவங்களைத் தவிர்க்க கோவில் நிர்வாகங்கள் மற்றும் உள்ளூர் நிர்வாகங்கள் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
முன்னதாக கரூரில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
