நாடு முழுவதும் பிஎம் கிசான் திட்டத்தின் (PM Kisan Samman Nidhi) கீழ் 9.7 கோடி விவசாயிகளுக்கு 20-வது தவணையாக ரூ2,000 உதவித் தொகையை பிரதமர் மோடி நேற்று வழங்கினார்.
பிஎம் கிசான் திட்டம் என்பது நாடு முழுவதும் ஏழை விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ6,000 வழங்குவதாகும். ஒரு ஆண்டுக்கு ரூ2,000 வீதம் 3 தவணைகளாக இந்த தொகை வழங்கப்படும்.
விவசாயிகளுக்கு 20-வது தவணையாக ரூ 2,000 விடுவிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் நேற்று ஆகஸ்ட் 2-ந் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இந்த நிதியை வழங்கினார்.
20-வது தவணையாக நாடு முழுவதும் 9.7 கோடி விவசாயிகளுக்கு மொத்தம் ரூ20,500 கோடி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, 2019-ல் இத்திட்டம் தொடங்கப்பட்டபோது, சில முக்கிய எதிர்க்கட்சிகள் பல்வேறு வதந்திகளைப் பரப்பி தேர்தலுக்குப் பிறகு பணம் நிறுத்தப்படும் என்றும், வேறு சிலர் பரிமாற்றப்படும் பணம் திரும்பப் பெறப்படும் என்றும் விமர்சித்தனர்.
ஆனால் விவசாயிகளுக்கு இதுவரையில் ஒரு தவணையாவது நிறுத்தப்பட்டதா? இந்த நிதி, தடையின்றித் தொடர்கிறது. இதுவரை, ரூ.3.75 லட்சம் கோடி நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்குகளுக்கு பரிமாற்றப்பட்டுள்ளது என்றார்.
ரூ 2,000- எப்படி உறுதி செய்வது?
- விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ2,000 பணம் வரவு வைக்கப்பட்டிருந்தால் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணுக்கு மெசேஜ் அனுப்பி வைக்கப்பட்டிருக்கும்.
- https://pmkisan.gov.in/இணையதளத்தில் Know Your Status என்ற லிங்க்கை கிளிக் செய்ய வேண்டும்
- அதில் உங்களது பதிவு எண்ணை பதிவிட வேண்டும்
- பதிவு எண் மறந்துவிட்டால் தொலைபேசி எண், ஆதார் எண் மூலம் கண்டறிய முடியும்
- பதிவு எண்ணை பதிவிட்டு உங்களது கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பதை அறியலாம்.