உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது காலணி வீசிய வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் மீது பெங்களூர் போலீஸார் ஜீரோ எப்ஐஆரை பதிவு செய்துள்ளனர்.
உச்சநீதிமன்றத்தில் கடந்த 6ஆம் தேதி வழக்கு விசாரணையின் போது தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது ராகேஷ் கிஷோர் என்ற வழக்கறிஞர் காலணி வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனை கண்டித்து நாடு முழுவதும் எழுந்த கண்டனகுரல்களை அடுத்து ராகேஷை இந்திய பார் கவுன்சில் இடைநீக்கம் செய்தது. எனினு அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்படாததால் நாடு முழுவதும் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் பக்தவத்சலாவின் புகாரின் பேரில் பெங்களூர் விதான் சவுதா போலீசார் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.
பொதுவாக குற்றம் எந்த காவல் நிலையத்தின் எல்லைக்குள் நடக்கிறதோ அந்த காவல் நிலையத்தில்தான் வழக்குப்பதிவு செய்யப்படும். ஆனால், தீவிர குற்றமாக இருப்பின், காவல் நிலைய எல்லையை கணக்கில் கொள்ளாமல் வழக்குப்பதிவு செய்யப்படும். இதைத்தான் ஜீரோ எப்ஐஆர் என்பர் இப்படி பதிவு செய்யப்பட்ட எப்ஐஆர், பின்னர் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படும். அவர்கள் இந்த வழக்குக்கு எண்ணை கொடுத்து, சாதாரண எப்ஐஆராக மாற்றுவார்கள். பின்னர் புலன் விசாரணை தொடங்கும்.
அந்த வகையில் தான் தற்போது வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் மீது பாரதிய நியாய சம்ஹிதா (BNS) சட்டத்தின் பிரிவுகள் 132 (பொது ஊழியரை கடமையைச் செய்வதைத் தடுக்க தாக்குதல்) மற்றும் 133 (அமைதியை மீறும் நோக்கத்துடன் வேண்டுமென்றே அவமதித்தல்) ஆகியவற்றின் கீழ் வழக்கப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் பக்தவத்சலா அளித்த புகாரில், “அக்டோபர் 6 அன்று, வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர், புது டெல்லியில் உள்ள இந்திய உச்ச நீதிமன்றத்தின் கோர்ட் ஹால் எண் 1-இல் மேடையை நோக்கி காலணி வீசினார். அப்போது எதிரில், இந்திய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மற்றும் நீதிபதி கே. வினோத் சந்திரன் ஆகியோர் அமர்ந்திருந்தனர். நீதித்துறையின் கண்ணியத்தையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாக்கும் வகையில் குற்றம் சாட்டப்பட்டவர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்” என புகாரில் கூறப்பட்டுள்ளது.