ஈரோட்டில் 18 வயது இளைஞன் வீடியோ கேம் விளையாடியதற்காக தன் பெற்றோர் திட்டியதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார்.
இரண்டு வருட கொரோனா பாதிப்பு அனைவரையும் தனது செல்போன்களுக்குள் மூழ்க செய்துள்ளது. குறிப்பாக சிறுவர்கள் வீடியோ கேமுக்கு அடிமையாக ஆரம்பித்தார்கள். மேலும் ஆன்லைன் ரம்மி கேமுக்குப் பலபேர் அடிமையானதால் சில தற்கொலைகள் தமிழ்நாட்டில் நடந்தன. இந்த நிலையில் ஈரோட்டில் 18 வயது இளைஞன் வீடியோ கேம் விளையாடியதற்காக தன் பெற்றோர்கள் திட்டியதால் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த 18 வயது இளைஞன் ஈரோடு மாவட்டம், கொடுமுடி தொகுதி வெள்ளோட்டம்பரப்பு பகுதியைச் சேர்ந்தவன். சமீபத்தில்தான் ப்ளஸ்-டூ தேர்வு எழுதியிருந்தான். தேர்வுகள் முடிந்த பிறகு தினமும் மொபைல்போனில் இருந்ததற்காக அவன் பெற்றோர் அவனை கண்டித்துள்ளனர். பெற்றோர் எவ்வளவோ அறிவுரை சொல்லியும் அவன் மொபைல்போனும் கையுமாக இருந்ததால் அவனை கடுமையாக கண்டித்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று மாலை, அவன் பெற்றோர் வேலைக்காக ஆலைக்குச் சென்றிருக்கும்போது விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டான். தகவல் அறிந்த பெற்றோர் வீட்டுக்கு வந்து அவனை அவசரமாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவன் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்த மலையம்பாளையம் போலீஸார், கடந்த சில நாட்களாக மொபைலில் தொடர்ந்து கேம்ஸ் விளையாடிக்கொண்டிருந்த அந்த இளைஞன் மன உளைச்சலில் இருந்ததாகக் கூறினர்.
பெற்றோர் கண்டித்ததால் இளைஞன் தற்கொலை!
Published On:
| By admin
இதையும் படிங்க!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
