அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளராக லெனின் பிரசாத் நியமிக்கப்பட்டுள்ளார்.
அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் பட்டியலை காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் நேற்று வெளியிட்டார்.

இதில் திருச்சியை சேர்ந்த லெனின் பிரசாத்துக்கு காங்கிரஸில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்த இவர் அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
யார் இந்த லெனின் பிரசாத்?
லெனின் பிரசாத்துக்கு சொந்த ஊர் திருச்சி. தந்தை மதிவாணன், தாய் பங்குஜம். மதிவாணன் திருச்சி பி.எப் அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பங்குஜம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தலைமை செவிலியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது திருச்சி மாநகர 8ஆவது வார்டு திமுக கவுன்சிலராக உள்ளார். லெனின் பிரசாத்தின் அண்ணன் அருண் பிரசாத்.
இவருடைய தாய் மாமா குளித்தலை பிரபாகரன், காங்கிரஸ் கட்சியில் பொதுக்குழு உறுப்பினராக இருக்கிறார். எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும், லெனின் பிரசாத்தை குளித்தலை பிரபாகரன் அழைத்து சென்றுவிடுவார். இதன் காரணமாக, லெனின் பிரசாத் குடும்பத்தினர் அனைவரும் திமுகவைச் சேர்ந்தவர்கள் என்றாலும் இவர் காங்கிரஸ் கட்சியால் ஈர்க்கப்பட்டார்.
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்தபோது, இளைஞரணி நிர்வாகிகளை தேர்தல் முறையில் தான் தேர்வு செய்ய வேண்டும் என்று முடிவு செய்தார்.
அதன்படி, 2009ல் திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவராகவும், 2013ல் திருச்சி நாடாளுமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் துணை தலைவராகவும்,
2015ல் திருச்சி நாடாளுமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவராகவும், 2017ல் மாநில இளைஞரணி காங்கிரஸ் துணை தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டார். 2020ல் அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தேசிய செயலாளராக நியமிக்கப்பட்டார்.
2022ல் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்ட லெனின் பிரசாத் தற்போது தேசிய இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மூன்று மாதங்களுக்கு முன்பு, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் நடத்திய தேசிய இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நேர்காணல் நடத்தினர். அப்போது இவருக்கு தேசிய இளைஞர் காங்கிரஸ் தலைவர் பொறுப்பு கொடுக்க ஆலோசனை செய்யப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் கட்சியின், தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையும் தலித் சமூதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், தேசிய இளைஞர் காங்கிரஸ் தலைவர் பொறுப்பை அதே சமுதாயத்தைச் சேர்ந்த லெனின் பிரசாத்துக்கு கொடுக்க வேண்டாம் என்று முடிவெடுத்து பொதுச்செயலாளர் பொறுப்பை கொடுத்துள்ளது காங்கிரஸ் தலைமை என்கிறார்கள் அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள்.
ராகுல் தகுதி நீக்கத்துக்கு எதிராக போராட்டம்
’மோடி’ சமூதாயம் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்ட போது, இதை எதிர்த்தும் மத்திய பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவித்தும் சென்னையில் போராட்டம் நடத்தியவர் இந்த லெனின் பிரசாத். தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவி காலம் கடந்த ஜூன் மாதம் முடிந்த போது, அறிக்கை ஒன்றை வெளியிட்ட லெனின் பிரசாத் ராகுல் காந்தியை பிரதமர் ஆக்குவதே இலக்கு என்று குறிப்பிட்டிருந்தார்.
இப்படி காங்கிரஸில் தீவிரமாக செயல்பட்ட வந்த நிலையில் தற்போது தேசிய அளவில் முக்கிய பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னையை சேர்ந்த சிந்துஜா ராஜு மற்றும் கோவையைச் சேர்ந்த ஸ்ரீநிதி ஆகியோர் தேசிய செயலாளர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.