பெருங்குடியில் ரயிலுக்காக காத்திருந்த ஆசிரியையிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சென்னையில் செயின் பறிப்பு என்பது தினசரி நடந்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் ஒரே நாளில் 8 இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்தன. இதில் ஈடுபட்ட வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்தநிலையில் சென்னை பெருங்குடி ரயில் நிலையத்தில் அதிர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது.
பெருங்குடி ரயில் நிலையத்தில் வேளச்சேரி தனியார் பள்ளியில் வேலை செய்து வரும் கோட்டூர்புரத்தை சேர்ந்த ரோசி நேற்று (ஜூலை 30) ரயிலுக்காக காத்திருந்தார். அங்கிருந்த இருக்கையில் அமர்ந்திருந்த ரோசியின் அருகில் ஒரு இளைஞர் வந்து அமர்ந்தார். பின்னர் நாலா பக்கமும் நோட்டம்விட்ட அந்த இளைஞர், ரோசியின் கழுத்தில் இருந்த தங்கச் செயினை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் ஓடிவிட்டார்.
ஆசிரியை ரோசி உதவி கேட்டு கத்தி சத்தம் போட்டார். எனினும் அருகில் யாரும் இல்லாததால் அந்த நபர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.
அப்போது ரயில் நிலையத்தில் கூட்டமில்லை. ரோசி தனியாக அமர்ந்திருந்தது சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது. இதுதொடர்பாக திருவான்மியூர் ரயில்வே போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்தநிலையில் இன்று (ஜூலை 30) அந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அந்த இளைஞர் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பாபாஜி என்கிற சௌந்தர் (28) என்பது தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட சௌந்தர் மீது மறைமலைநகர் காவல் நிலையத்தில் செல்போன் பறிப்பு வழக்கு உள்ளது.
தொடர்ந்து வேறு எங்கேயாவது இதுபோன்று செயின் பறிப்பில் ஈடுபட்டுள்ளாரா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.