நெல்லை பேருந்து நிலையத்தில் பயங்கரம்: இளம்பெண் வெட்டிப் படுகொலை

Published On:

| By Pandeeswari Gurusamy

நெல்லை சந்திப்பு பெரியார் பேருந்து நிலையத்தில், பட்டப்பகலில் இளம்பெண் ஒருவர் அவரது கணவராலேயே வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் உள்ள பெரியார் பேருந்து நிலையத்தில் இன்று வழக்கம் போல் பயணிகள் கூட்டம் அதிகளவில் இருந்தது. அப்போது அங்கு நின்றுகொண்டிருந்த பேச்சியம்மாள் என்ற இளம்பெண்ணை, திடீரென அங்கு வந்த இளைஞர் ஒருவர் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டினார்.

ADVERTISEMENT

இந்தக் கொடூரத் தாக்குதலில் பலத்த காயமடைந்த பேச்சியம்மாள், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த இந்தச் சம்பவம் அங்கிருந்த பயணிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.

கொலை செய்த கையோடு அந்த இளைஞர் நேராக அருகில் உள்ள காவல் நிலையத்திற்குச் சென்று சரணடைந்தார். போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சரணடைந்தவர் பேச்சியம்மாளின் கணவர் சுதாகர் என்பது தெரியவந்தது.

ADVERTISEMENT

குடும்பப் பிரச்சினை காரணமாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சுதாகர் தனது மனைவியைப் பின்தொடர்ந்து வந்து பேருந்து நிலையத்திலேயே வெட்டிப் படுகொலை செய்தது விசாரணையில் உறுதியானது.

தற்போது சுதாகரை கைது செய்துள்ள போலீஸார், இது குறித்து மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்தத் துணிகரக் கொலைச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share