எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வனுக்கு 2025-ஆம் ஆண்டு சாகித்திய அகாதமி விருது: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Published On:

| By Pandeeswari Gurusamy

Tamilselvan

கடந்த 2025-ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் உயரிய இலக்கிய அங்கீகாரமான சாகித்திய அகாதமி விருது, மூத்த எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் எழுதிய ‘தமிழ் சிறுகதையின் தடங்கள்’ என்ற இலக்கிய ஆய்வு மற்றும் விமர்சன நூலுக்காக இந்த விருது வழங்கப்படுவதாகச் சாகித்திய அகாதமி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

நூலின் சிறப்பம்சங்கள்:

சாகித்திய அகாதமி விருது கவிதை, நாவல், சிறுகதை மற்றும் இலக்கிய ஆய்வுகள் போன்ற பல்வேறு வகைமைகளின் கீழ் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. அந்த வகையில், ச. தமிழ்ச்செல்வன் எழுதியுள்ள ‘தமிழ் சிறுகதையின் தடங்கள்’ நூல், தமிழ் சிறுகதை இலக்கியத்தின் தோற்றம் தொடங்கி, அதன் பல்வேறு காலகட்ட வளர்ச்சி மற்றும் சமூக மாற்றங்கள் சிறுகதைகளில் எவ்வாறு எதிரொலித்தன என்பதை மிக விரிவாகவும் நுட்பமாகவும் ஆராய்கிறது.

ADVERTISEMENT

இந்நூலை உருவாக்குவதற்காக சுமார் 2 ஆண்டுகள் செலவிட்டதாகவும், 50-க்கும் மேற்பட்ட சிறுகதைகளை ஆழமாக வாசித்து அதன் பின்னணியில் இந்த ஆய்வு நூலை எழுதியதாகவும் எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி:

ஏற்கனவே கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இவருக்கு விருது அறிவிக்கப்பட வேண்டிய சூழலில், மத்திய அரசின் தலையீடு காரணமாக அந்த அறிவிப்பு நிறுத்தி வைக்கப்பட்டதாகப் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. தற்போது அந்தச் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, அவருக்கு அதிகாரப்பூர்வமாக விருது அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

சிறந்த சிறுகதை எழுத்தாளராகவும், இடதுசாரி சிந்தனையாளராகவும் அறியப்படும் ச. தமிழ்ச்செல்வன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் (தமுஎகச) முன்னாள் மாநிலத் தலைவராகப் பணியாற்றியவர். ‘வெயிலோடு போய்’, ‘வாளின் தனிமை’ போன்ற புகழ்பெற்ற படைப்புகளைத் தந்த அவருக்குச் சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டுள்ளதை அடுத்து, அரசியல் தலைவர்கள் மற்றும் இலக்கிய ஆளுமைகள் எனப் பல தரப்பினரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share