தெருநாய்களை கட்டுபடுத்துவது குறித்த வழக்கு உச்சநீதிமன்றம் வரை சென்று நாடு முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இதுதொடர்பாக விவாதங்கள் வெடித்துள்ளன.
இதுஒருபுறமிருக்க பல ஆயிரம் ஆண்டுகளாக மனிதர்களின் உற்ற நண்பனாகவும், பாதுகாவலாகவும் இருக்கும் நாய்களுக்கான போட்டிகள் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் உலகின் மிக அசிங்கமான நாய்களுக்கான போட்டி சமீபத்தில் அமெரிக்காவின் கல்போர்னியா மாகாணத்தில் உள்ள சாண்டாரோசா பகுதியில் நடைபெற்றது.
இந்த போட்டியில் 2 வயதான ஆங்கில-பிரெஞ்சு புல்டாக் கலவையான உடலில் முடியே இல்லாத பெட்டூனியா என்ற நாய், “உலகின் அசிங்கமான நாய்” என்ற பட்டத்தை வென்றது. இதன்மூலம் இந்திய மதிப்பில் சுமார் ரூ.4.3 லட்சம் ரொக்கப்பரிசையும் கைப்பற்றியது.
அமெரிக்காவின் ஓரிகான் மாநிலத்தின் யூஜினைச் சேர்ந்த இந்த நாய்க்குட்டியின் உரிமையாளர் ஷானன் நைமன் என்ற பெண்மணி ஆவார்.
அவர் கூறுகையில், “இரண்டு வயதான பெட்டூனியா, ஒரு மோசமான உரிமையாளர் காரணமாக அதன் ரோமங்களை இழந்தாள். பின்னர் அவரிடமிருந்து மீட்கப்பட்டு, தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவள் மற்ற நாய்கள், பூனைகள் மற்றும் மக்களை நேசிக்கும் மென்மையான ஆன்மாவாக கருதப்படுகிறாள்” என மகிழ்ச்சியுடன் விவரிக்கிறார்.
கடந்த 50 ஆண்டுகளாக நடந்து வரும் இந்த போட்டி உலகளவில் நாய் பிரியர்களால் முக்கியமாக பார்க்கப்படுகிறது.
போட்டியை நடத்தும் சோனோமா-மரின் கண்காட்சி அமைப்பு கூறுகையில், போட்டியில் பங்கேற்கும் பல நாய்கள் மோசமான இடங்களில் இருந்து மீட்கப்பட்டு வளர்க்கப்படுகிறது. இந்த நாய்கள் இதயங்களை அரவணைத்து, வாழ்க்கையை நிபந்தனையற்ற அன்பால் நிரப்பியுள்ளன. இந்த உலகப் புகழ்பெற்ற நிகழ்வு அனைத்து நாய்களையும் அதன் தனித்துவம் மற்றும் குறைபாடுகளையும் கொண்டாடும் நிகழ்வாக பார்க்கப்படுகிறது என தெரிவிக்கிறது.