திங்கட்கிழமை காலையில் அலுவலகம் செல்ல நினைத்தாலே பலருக்குக் கசக்கும். ஆனால், “ஆபீஸ் போனா என் ஃப்ரெண்டை பார்க்கலாம்,” என்ற எண்ணம் வந்தால், அந்தக் காலையே உற்சாகமாகிவிடும்.
கார்ப்பரேட் உலகில் ‘வொர்க் பெஸ்டி’ (Work Bestie) என்று அழைக்கப்படும் அலுவலக நண்பர்கள், வெறும் பொழுதுபோக்குக்கு மட்டுமல்ல; உங்கள் வேலைக்கும் வளர்ச்சிக்கும் மிக முக்கியமானவர்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
நட்பு எப்படி வேலையை வளர்க்கும்? (The Science) வேலை என்பது வெறும் கம்ப்யூட்டர் தட்டுவது மட்டுமல்ல; அது ஒரு மனநிலை சார்ந்த விஷயம்.
- ஸ்ட்ரெஸ் பஸ்டர் (Stress Buster): பாஸ் திட்டிவிட்டாலோ அல்லது டார்கெட் நெருக்கடி இருந்தாலோ, அதை அப்படியே கொட்டித்தீர்க்க ஒரு காது வேண்டும். அது ஒரு சக ஊழியராக இருக்கும்போது, “விடு மச்சான் பார்த்துக்கலாம்,” என்ற ஒற்றை வார்த்தை தரும் ஆறுதல், எந்த கவுன்சிலிங்கும் தராது.
- வேலையை விடமாட்டார்கள் (Retention): கேலப் (Gallup) நிறுவனத்தின் பிரபலமான ஆய்வின்படி, அலுவலகத்தில் ஒரு நெருங்கிய நண்பர் இருப்பவர்கள், வேலையை விட்டுச் செல்லும் வாய்ப்பு மிகவும் குறைவு. சம்பளத்தை விட, அந்த நட்பு வட்டம் தரும் நிம்மதி அவர்களை வேலையில் தக்கவைக்கிறது.
- உற்பத்தித்திறன்: மகிழ்ச்சியான மனநிலையில் இருக்கும்போது மூளை சிறப்பாகச் செயல்படும். நண்பர்களுடன் சிரித்துப் பேசிவிட்டு வேலை செய்யும்போது சோர்வு தெரியாது.
எல்லை தாண்டிவிடாதீர்கள் (Professional Boundaries): ஆபீஸ் நட்பு நல்லதுதான். ஆனால், அதுவே உங்கள் வேலைக்கு உலை வைத்துவிடக்கூடாது.
- கிசுகிசு வேண்டாம்: நட்பாகப் பேசுவது வேறு; புறம் பேசுவது (Gossip) வேறு. உங்கள் நண்பரிடம் மற்றவர்களைப் பற்றித் தவறாகப் பேசுவதைத் தவிருங்கள். அது நாளை உங்களுக்கு எதிராகத் திரும்பலாம்.
- குழுப்பிரிவினை (Cliques): நீங்களும் உங்கள் நண்பரும் மட்டும் தனியாகச் செயல்பட்டால், மற்ற ஊழியர்கள் உங்களை ஒதுக்கி வைப்பார்கள். நட்பு தனி, டீம் ஒர்க் (Team work) தனி.
- எமோஷனல் டம்ப்பிங்: உங்கள் வீட்டுப் பிரச்சனைகள் அனைத்தையும் அலுவலக நேரத்தில் நண்பரிடம் கொட்டாதீர்கள். அது அவர் வேலையைப் பாதிக்கும்.
எப்படி நட்பை உருவாக்குவது? யாரிடமும் வலியச் சென்று பேசத் தேவையில்லை. ஒரு காபி பிரேக்கின் போதோ அல்லது லஞ்ச் டைமிலோ, வேலை தாண்டிய பொதுவான விஷயங்களைப் (சினிமா, கிரிக்கெட்) பற்றிப் பேசிப் பாருங்கள். அலைவரிசை ஒத்துப்போனால் நட்பு தானாக மலரும்.
ஆபீஸில் ஒரு நல்ல நண்பர் கிடைப்பது வரம். அப்படி ஒருவர் உங்களுக்கு இருந்தால், இன்றே அவருக்கு ஒரு ‘தேங்க்ஸ்’ சொல்லுங்கள்!
