மகளின் காதல் திருமணத்தால் ஆத்திரம் அடைந்த பெண் வீட்டார் இளைஞர் மீது கார் ஏற்றி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் பூதமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவருக்கு வயது 21. இவர் ராகவி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்தார். ராகவிக்கு ஏற்கனவே திருமணமாகி இருந்த நிலையில் அவரது கணவர் வாகன விபத்தில் உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ராகவி, சதீஷ் குமாரை காதலித்து திருமணம் செய்திருந்தார். இவர்கள் திருச்சியில் வசித்து வந்தனர்.
இதற்கிடையில் தனது மகள் ராகவி வீட்டில் இருந்த நகைகளை திருடிச் சென்று விட்டதாக அவரது தந்தை மேலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் இரு தரப்பினரையும் அழைத்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் நேற்று இரவு 11.30 மணி வரை விசாரணை நடந்த நிலையில் இன்று மீணடும் விசாரணைக்கு வருமாறு தெரிவித்து அனுப்பி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து ராகவி மற்றும் அவரது கணவர் சதீஷ் குமார் இருவரும் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அய்யாபட்டி விலக்கு அருகே ராகவியின் உறவினர்கள் சதீஷ் குமார் – ராகவி தம்பதி மீது காரை விட்டு இடித்தனர். இதில் சதீஷ் குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ராகவி தற்போது மேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பம் குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.