திருமணமான 78 நாட்களில் வரதட்சணை கொடுமைத் தாங்காமல் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சியடைய செய்துள்ளது. woman suicide after 78 days of marraige by dowry
திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டிப்புதூர் பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை. பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருடைய மகள் ரிதன்யா (27).
இவருக்கும் அதே கைகாட்டிப்புதூர் ஜெயம்கார்டன் பகுதியில் வசித்து வரும் கவின்குமார் என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன் சுமார் ரூ.2.5 கோடி செலவில் திருமணம் நடைபெற்றது. அப்போது ரிதன்யாவின் பெற்றோர் 300 பவுன் தங்கம் மற்றும் 70 லட்சம் கார் ஆகியவற்றை வரதட்சனையாக கொடுத்துள்ளனர்.
இது போதாது என்று மேற்கொண்டு வரதட்சனைக் கேட்டு கவின் குடும்பத்தார் துன்புறுத்தியதாக கூறப்படும் நிலையில், அவிநாசியில் இருந்து காரை தனியே ஓட்டி வந்த ரிதன்யா, மொண்டிபாளையம் அருகே செட்டிபுதூரில் காரை நிறுத்தி, பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து கடந்த 27ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.
இதுதொடர்பாக தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சேயூர் போலீஸார் விரைந்து வந்து, ரிதன்யாவின் உடலைக் கைப் பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
எனினும் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, உடலை வாங்க மறுத்து ரிதன்யாவின் உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு ரிதன்யா கதறி அழுதபடியே அவரது தந்தைக்கு ‘வாட்ஸ்-அப்’-ல் அனுப்பிய ஆடியோ வெளியாகி பலரையும் கலங்கச் செய்துள்ளது.
அவங்க எல்லாருமே நாடகம் ஆடுறாங்க!
அதில், “அப்பா என்னை மன்னிச்சிருங்க! அவ்வளவு தான் முடிஞ்சிபோச்சி.. போதும், என்னால முடியவில்லை. நான் போறேன். நீங்கள் என் மீது கோபப்படுவீங்கன்னு தெரியும். என்னை வெறுத்துவிடுவீர்கள் என்றும் தெரியும். காலம் முழுக்க உங்களையும் அம்மாவையும் கஷ்டப்படுத்திக் கொண்டு வேதனைப்படுத்திக் கொண்டு என்னாலயும் நிம்மதியாக இருக்க முடியாமல், ஊருக்காக என்னால் ஒருத்தனுடன் இருக்க முடியாதுப்பா!
நான் உங்களுக்கு பிறந்ததே முதல் தப்பு. அந்த குடும்பமே பிளான் போட்டுதான் என்னை திருமணம் செய்து கொண்டார்கள். அவன் பெத்தவங்க கொடுக்கும் மன ரீதியான கொடுமையையும் என்னால் தாங்க முடியவில்லை. கவின் உடல்ரீதியாக கொடுக்கும் டார்ச்சரையும் என்னால் தாங்க முடியவில்லை. அவங்க எல்லாருமே நாடகம் ஆடுறாங்க!
மனரீதியாக கவின் அம்மா அப்பா டார்ச்சர் பன்றாங்க. கவின் என்னை தினமும் உடல்ரீதியாக டார்ச்சர் செய்கிறான். இதை நான் யாரிடம் எப்படி சொல்லி புரிய வைப்பது? கேட்கறவங்களும், ’வாழ்க்கைன்னா இப்படித்தான் இருக்கும், சகித்துக் கொண்டு போ, இன்னும் பார்க்க வேண்டியது நிறைய இருக்கு’னுதான் சொல்றாங்களே தவிர நான் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கிறேன் என்பதை புரிஞ்சிக்க மாட்டேங்குறாங்க.
சத்தியமா இந்த வாழ்க்கை பிடிக்கல!
நீங்களும் நான் பொய் சொல்வதாக நினைப்பீர்கள். நான் சத்தியமாக பொய் சொல்லவில்லை. நான் நடந்ததை மட்டும்தான் சொன்னேன்.
உங்களால் என்னை ஏற்கவும் முடியாது, அப்படியே விடவும் முடியல. நான் காலம் முழுவதும் உங்களுக்கு பாரமாக இருக்க விரும்பவில்லை. என் மேல எந்த தப்பும் இல்லப்பா, சத்தியமா இந்த வாழ்க்கை எனக்கு பிடிக்கல. என்னால் இந்த வாழ்க்கையை தொடர முடியும் என தோன்றவில்லை.
இதை என் தலையெழுத்து என நினைச்சிக்கிறேன். பஞ்சாயத்து பேசுவது, கோயிலுக்கு பரிகாரம் செய்ய கூட்டிட்டு போறது, இதனால் எந்த ஒரு பிரச்சினையும் தீராதுப்பா!
எனக்கு உண்மையாகவே வாழ பிடிக்கவில்லை. எனக்கு எந்த நம்பிக்கையும் இல்லை. நான் யாரையும் கஷ்டப்படுத்தியது இல்லை. என் வாழ்க்கை ஏன் இப்படி ஆகியிருக்கிறது என்பதும் எனக்கு புரியவில்லை. நான் போகிறேன்ப்பா, இப்படியே இருந்து இருந்து எந்த விதத்திலும் உங்களை கஷ்டப்படுத்த விரும்பவில்லை” என அழுக அழுக பேசியுள்ளார்.
மூவர் கைது!
இந்த ஆடியோ ஆதராத்தையும் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போலீசார், கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ரா தேவி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து நேற்று கைது செய்தனர். திருமணமான 3 மாதங்களில் ரிதன்யா தற்கொலை செய்து கொண்டதால் அவர்களிடம் கோட்டாட்சியரும் விசாரித்து வருகிறார்.
இந்த நிலையில் புகுந்த வீட்டின் கொடுமை தாங்க முடியாமல் உயிரை மாய்த்துக்கொண்ட ரிதன்யாவின் தந்தை கண்கலங்க பேட்டி அளித்துள்ளார்.
அவ சொன்னதெல்லாம் கேட்டால், கண்ணுல ரத்தம் வந்துரும்!
அவர், “என் புள்ள வாழ்க்கையே போயிடுச்சி.. நல்ல குடும்பம், பாரம்பரிய குடும்பம்னு சொல்லி ஏமாத்தி கல்யாணம் முடிச்சிட்டாங்க. புள்ளைய சின்னாபின்னமா ஆக்கிட்டாங்க. கல்யாணம் முடிஞ்சி போன 15வது நாளே வீட்டுக்கு அனுப்பிவிட்டாங்க.
என்ன பிரச்சனைனு கேக்கும்போது, அவள் (ரிதன்யா) சொன்னதெல்லாம் கேட்டால், கண்ணுல ரத்தம் வந்துரும்ங்க. அவ்வளவு உடல் ரீதியான, மன ரீதியான, பண ரீதியான கொடுமைலாம் பண்ணிருக்காங்க.
அப்போ நான் சொன்னதெல்லாம், “தங்கம் புதுக் குடும்பம் அமைஞ்சிருக்கு. கொஞ்சம் அனுசரிச்சி போம்மா”னு சொன்னேன். அதுக்கப்புறம் 10 நாள் கழிச்சி மாப்ள வீட்டுல இருந்து வந்தாங்க. அப்போ, மாமியார தனியா கூட்டுப்போய், சுமார் ஒன்றரை மணி நேரம் தனக்கு உடல்ரீதியாக கவின் பண்ண கொடுமையெல்லாம் சொன்னாள். அதைக்கேட்டு வெளியே வந்த சம்பந்தியம்மா, “இனிமே இதுமாதிரி தவறெல்லாம் நடக்காதுங்க. என்ற பையன் இப்படியெல்லாம் இருப்பான்னு நானே நெனச்சி பாக்கல. இனிமேல் நான் பாத்துக்கிறேன்”னு சொல்லி கூட்டு போனாங்க.
என் புள்ளைக்கு நீதி கிடைக்கனும்!
ஆனால் மறுபடியும் 20 நாள் கழிச்சி பிரச்சனை. அப்பவும் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் ரொம்ப பாதிக்கப்பட்டிருந்தாள். அப்போது அவளை சமாதானம் செய்த என்னிடம், ”அப்பா அவங்க உங்கக்கிட்ட ஒரு மாதிரியாகவும், எங்கிட்ட வேறு மாதிரியாவும் நடந்துக்கிறாங்க. வீட்டுக்குள்ள போனா கதவு எல்லாம் அடைச்சி வச்சிக்குறாங்க. நாலரை கோடி செலவு பண்ணி வீடு கட்டிருக்கேனு சொல்லி, சமையலறைக்கு போகக் கூடாது, பூஜையறைக்கு போகக் கூடாது, எதையும் தொடக்கூடாதுனு சொல்லி மெண்டல் டார்ச்சர் பண்றாங்க”னு சொன்னாள்.
அதையெல்லாம் கேட்டுட்டு, ‘தங்கம் இனி நீ அங்க போக வேண்டாம். இங்கேயே இரு. என்ன வருதோ பாத்துக்கலாம்’னு சொன்னேன். ஆனால் அதுக்கபுறம் அங்க போன புள்ளைய என்னெனவோ கொடுமை பண்ணிருக்காங்க. எல்லாத்தையும் வாய்ஸ் ரெக்கார்டா போட்டு உயிரை மாய்ச்சுட்டாள். அத்தனை அட்டூழியம் பண்ணிருக்காங்க. என் புள்ளைக்கு நடந்தாமாறி இனி யாருக்கும் நடக்கக்கூடாது. என்புள்ளைக்கு நீதி கிடைக்கனும்” என்று கைக்கூப்பி கண்கலங்க வேண்டுகிறார் அண்ணாதுரை.