நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் ஆகியோரது வீடுகளுக்கு பெண் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தொடர்பாக சென்னை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் அண்மை காலமாக வெடிகுண்டு மிரட்டல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், திரை நட்சத்திரங்கள், முக்கிய அரசு நிறுவனங்கள் எனப் பல்வேறு தரப்பினரையும் குறிவைத்து மின்னஞ்சல் வழியாக போலி வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் புரளி எனவும் போலீசார் உறுதி செய்துள்ளனர். மேலும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் எனவும் போலீசார் எச்சரித்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக அமைச்சர்கள் கே.என். நேரு, சேகர்பாபு, மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரின் திருச்சி மற்றும் சென்னையில் உள்ள வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. உடனடியாக விரைந்த வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை நடத்தியதில், அவை அனைத்தும் புரளி என உறுதி செய்தனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு 15 முறைக்கும் மேலாக வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. நடிகர்கள் அஜித் குமார், எஸ்.வி. சேகர், நடிகை ரம்யா கிருஷ்ணன், பாடகி சின்மயி ஆகியோரின் வீடுகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளன. பள்ளிகள், கல்லூரிகள், கோவில்கள், அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், ரயில் நிலையங்கள், முதலமைச்சர் வீடு, நடிகர்கள் வீடுகள், டிஜிபி அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய இடங்களையும் குறிவைத்து இந்த மிரட்டல்கள் தொடர்கின்றன.
இந்த நிலையில் ரஜினிகாந்த், கேஎஸ் ரவிக்குமார் வீடுகளில் வெடிகுண்டு வெடிக்கும் என போனில் பெண் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக சென்னை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
