கேரளா மாநிலம் சபரிமலையில் கூட்ட நெரிசலில் சிக்கி கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த சதி (வயது 58) என்ற பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைகளுக்காக நவம்பர் 16-ந் தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. ஒவ்வொரு நாளும் பக்தர்கள் வெள்ளத்தால் சபரிமலை சன்னிதானம் நிரம்பி வழிகிறது.
சபரிமலையில் 18 படிகளேறி ஐயப்பனை தரிசனம் செய்வதற்கு சுமார் 6 மணிநேரத்துக்கும் மேலாக பக்தர்கள் காத்திருக்கின்றனர்.
சபரிமலையில் பக்தர்களின் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த நாள்தோறும் 90,000 பக்தர்கள் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் ஆன்லைன் மூலமாக பதிவு செய்தோர் 70,000 பேர்; நேரடி முன்பதிவு செய்தோர் 20,000 பேர்.
இந்த நிலையில் சபரிமலைக்கு யாத்திரை சென்ற கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த 58 வயது பெண் சதி, கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோழிக்கோடு எடக்குளம் பகுதியைச் சேர்ந்த சதி, குடும்பத்தினருடன் பம்பையில் இருந்து சபரிமலைக்கு மலையேறிக் கொண்டிருந்தார். அப்பாச்சிமேடு பகுதியில் கடுமையான கூட்ட நெரிசல் சிக்கிய சதி, மூச்சுவிட முடியாமல் மயங்கி விழுந்தார். அவரை பக்தர்கள் மீட்டு பம்பை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சதி உயிரிழந்தார். இது பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
