நீதிபதி ப.உ.செம்மல் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்.பி, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ., திராவிடர் கழக பிரசார செயலாளர் அருள்மொழி உள்ளிட்டோர் வலியுறுத்தி உள்ளனர்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ.: நீதியென்பது அதிகாரத்தைப் பாதுகாக்க அல்ல. அநீதியால் பாதிக்கப்பட்ட மக்களைப் பாதுகாக்கவே. அந்த அடிப்படையில் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற அரசியலமைப்பு கோட்பாட்டை நடைமுறையில் நிலைநாட்ட முயன்ற மாவட்ட நீதிபதி ப.உ. செம்மலைப் பணியிடை நீக்கம் செய்திருப்பது முழுக்க முழுக்கத் தவறானதும் கண்டிக்கத்தக்கதும் ஆகும்.
ஒரு நீதிபதி சட்டத்தின் அடிப்படையில், சாட்சிகளின் அடிப்படையில், எந்த அதிகாரத்திற்கும் அஞ்சாமல் தீர்ப்பளித்தால் அதற்கான பரிசு இடைநீக்கமாக இருக்க முடியாது. இத்தகைய நடவடிக்கை நீதித்துறையின் சுதந்திரத்திற்கே நேரடியான சவால் ஆகும்.
நீதிபதி ப.உ. செம்மல், தமது பணிக்காலத்தில் ஒரே ஒரு வழக்கில் மட்டுமல்ல, தொடர்ந்து மக்களுக்குப் பயன் தரும் தீர்ப்புகளை வழங்கியவர். காவல்துறையில் சிலர் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியது தொடர்பான வழக்குகளில், அதிகாரத்தில் இருப்பவராக இருந்தாலும் சட்டத்திற்கு கட்டுப்பட்டவரே என்ற அடிப்படையில், இவரது தீர்ப்புகள் அமைந்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
எஸ்.சி / எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம் வெறும் சட்டப்புத்தக வரியாக இல்லாமல், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வில் உண்மையானப் பாதுகாப்பாக அமைய வேண்டும் என்ற அடிப்படையில், பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு உரிய நிவாரணம் வழங்கிய தீர்ப்புகள், ஏழை எளிய மக்கள் பொய் வழக்குகளில் சிக்கவைக்கப்பட்டபோது, சாட்சிகளையும் சட்ட விதிகளையும் ஆழமாக ஆராய்ந்து அவர்களுக்கு நீதி வழங்கிய தீர்ப்புகள், அரசியல் மற்றும் அதிகார அழுத்தங்கள் வெளிப்படையாக இருந்த போதிலும் அவற்றுக்கு அடிபணியாமல் சட்டத்தின் பக்கம் நின்ற தீர்ப்புகள் ஆகியவை, இவர் ஒரு மக்கள் நல நீதிபதி என்பதற்கான சாட்சிகளாக உள்ளன.
அப்படிப்பட்ட ஒரு நீதிபதி, சட்டத்தின் வரம்புக்குள் நின்று வழிகாட்டுதல் வழங்கியதற்காகப் பணியிடை நீக்கம் செய்யப்படுவது, நாளை எந்த நீதிபதியும் அதிகாரத்திற்கு எதிராகத் தீர்ப்பளிக்க முடியாத அச்ச சூழலை உருவாக்கும் அபாயகரமான முன்னுதாரணமாகும்.
இது ஒரு தனிநபருக்கு எதிரான நடவடிக்கை அல்ல. மாறாக, மக்கள் நீதியைப் பெறுவதற்கான கடைசி நம்பிக்கையாக இருக்கும் நீதித்துறையின் சுயமரியாதையைப் பலவீனப்படுத்தும் செயல்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி இந்தப் பணியிடை நீக்கத்தைக் கடுமையாகக் கண்டிக்கிறது. நீதிபதி ப.உ. செம்மல் அவர்களின் பணியிடை நீக்க உத்தரவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். மக்கள் நலன் காக்கும் தீர்ப்புகளை வழங்கும் நீதிபதிகளுக்கு, பாதுகாப்பும் மரியாதையும் உறுதி செய்யப்பட வேண்டும். நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவிதமான அரசியல் அல்லது அதிகாரத் தலையீடும் தமிழகத்தில் அனுமதிக்கப்படக் கூடாது.
நீதிக்காக நின்ற ஒருவரை தண்டிப்பது நீதியையே தண்டிப்பதற்கு சமம். அநீதிக்கு எதிராக நின்று நீதிக்காக குரல் கொடுக்கும் போராட்டத்தில், தமிழக வாழ்வுரிமை கட்சி எப்போதும் மக்களோடு நின்று செயல்படும் என்பதை, இதன் மூலம் உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.
விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்.பி: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பதவிகளுக்கு கொலிஜியம் பரிந்துரைத்துள்ள பெயர்களைப் பற்றிய சர்ச்சை; சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி நிஷா பானு இடமாற்றல்; திருப்பரங்குன்றம் பிரச்சனையில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவுகள் – என அண்மைக்காலமாகத் தமிழ்நாட்டு அரசியல் விவாதம் நீதித்துறையைச் சுற்றியே நடந்து கொண்டிருக்கும் நிலையில் மாவட்ட நீதிபதி ப.உ.செம்மல் அவர்களை சென்னை உயர்நீதிமன்றப் பதிவாளர் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ள செய்தி அவ்வளவாகக் கவனம் பெறாமல் போய்விட்டது.
எஸ்சி, எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் டிஎஸ்பி ஒருவரைக் கைது செய்ய ஆணைப் பிறப்பித்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. அவரது பிரச்சினை கையாளப்பட்டிருக்கும் விதத்தில் நீதிபதி கர்ணனை நீதித்துறை கையாண்டதன் அடையாளங்களைப் பார்க்க முடிகிறது.
எஸ்சி எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைத் தமிழ்நாடு காவல்துறை சரியாக நடைமுறைப்படுத்துவதில்லை என்பதை அரசாங்கம் தரும் புள்ளி விவரங்களே உறுதிப்படுத்தியுள்ளன. எதெதற்கோ கண்டெம்ப்ட் பவரைப் பயன்படுத்தும் உயர்நீதிமன்றமும் எஸ்சி எஸ்டி மக்கள் விஷயத்தில் அதைப் பயன்படுத்த முன்வருவதில்லை. பஞ்சமி நில மீட்பு, பொது சுடுகாடு ஆகிய விஷயங்களில் நீதிமன்றம் பலமுறை உத்தரவிட்டும் தமிழ்நாடு அரசு அதைச் செயல்படுத்தவில்லை. அவற்றைச் செயல்படுத்த நீதிமன்றம் தனது கண்டெம்ப்ட் பவரைப் பயன்படுத்தியதில்லை. இந்நிலையில், ‘மாவட்ட நீதிபதியாக இருந்த ப.உ.செம்மல் அவர்கள் எஸ்சி எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை செயல்படுத்த முயன்றிருக்கிறார். அதற்காகவே அவர் இப்படி பழிவாங்கப்பட்டிருக்கிறார்’ என்று கூறப்படுகிறது.
நீதித்துறையில் சமூக நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று உரத்துக் குரல் கொடுக்கிற நாம், மிகவும் பிற்படுத்தப்பட்ட வன்னியர் சமூகத்தைச் சார்ந்த மாவட்ட நீதிபதி ப.உ.செம்மல் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதைக் கவலையோடு பார்க்க வேண்டியுள்ளது. அவர் எனது நாடாளுமன்றத் தொகுதியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இதுவரை வேறெந்த குற்றச்சாட்டுக்கும் அவர் ஆளானதில்லை என அறிகிறேன்.
தமிழ்நாடு அரசு விருப்பு வெறுப்பின்றி இந்தப் பிரச்சனையை அணுகி மாவட்ட நீதிபதி ப.உ.செம்மல் அவர்களின் இடைநீக்க உத்தரவை ரத்து செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
திராவிடர் கழக பிரசார செயலாளர் அருள்மொழி: மாவட்ட நீதிபதி செம்மல், பல்வேறு இடங்களில் பணிபுரிந்துள்ளார்.
எந்த ஊரிலும் எந்த நிலையிலும் அவர் மீது குற்றச்சாட்டு எழுந்ததில்லை. வழக்கறிஞர்களோ வழக்காடிகளோ அவர் நீதி வழங்குவார் என்ற நம்பிக்கையுடன்தான் இருப்பார்கள்.
ஒரு அநீதி கண்டு சீறியதால் அவர் சென்னை உயர்நீதி மன்றத்தால் குற்றச்சாட்டு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
விதி மீறல் என்ற விசாரணைக்கு வழக்கின் ஆவணங்களே போதும். அவரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி எழுகிறது. இது அவரது அவரது பணிமூப்பு Seniority தகுதியை பாதிக்கலாம். வேறு பட்டியல்களில் அவர் பெயர் இடம் பெறாமல் போகவும் அவரை விட சீனியாரிட்டி குறைந்தவர்கள் அவரை தாண்டிச் செல்லவும் வழிவகுக்கும்! இதனால் ஏற்படும் பாதிப்பை நாளை சரிசெய்ய முடியுமா என்பதை உயர் நீதி மன்றம் பரிசீலிக்க வேண்டும்!
அறம் சார்ந்து செயல்படும் நீதிபதிகள் மீது அக்கறை கொண்ட வழக்கறிஞர்களின் கோரிக்கை இதுதான்! செம்மல்களைத் தவறவிட்டால் நீதியின் இடத்தை யார் நிரப்புவார்கள்?.
