தைலாபுரம் தோட்டத்தில் ஒட்டுக்கேட்கும் கருவி கண்டு பிடிக்கப்பட்டதை தொடர்ந்து பொறியியல் சார்ந்த நிபுணர்களை வரவழைத்து பாமக நிறுவனர் ராமதாஸ் வீட்டையே அலசி ஆராய்ந்துள்ளார். Wiretapping device Ramadoss
பாமக நிறுவனர் ராமதாஸுக்கும், மகனும் பாமக தலைவருமான அன்புமணிக்கும் இடையே அதிகார மோதல் நடந்து வருகிறது.
2024ஆம் ஆண்டு புதுச்சேரி மாநிலம் பட்டனூரில் நடந்த பொதுக்குழுவின் போது, தன்னுடைய பேரன் முகுந்தனுக்கு இளைஞரணி தலைவர் பதவி வழங்குவதாக ராமதாஸ் அறிவித்த போது, அவருக்கும் அன்புமணிக்கும் இடையே மோதல் வெடித்தது. அந்த மோதல் இன்று வரை நீடித்து வருகிறது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் மாயவரத்தில் நடந்த பொதுக்குழுவிலும், பூம்புகாரில் மாநாடு நடக்கும் இடத்தை பார்வையிடவும் ராமதாஸ் சென்றிருந்தார்.
அன்றைய தினம், அதாவது ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் இல்லாத சமயத்தில் அன்புமணி அங்கு வந்து தனது அம்மாவைச் சந்தித்துவிட்டு சென்றார்.
இந்தசூழலில், “என் வீட்டிலேயே, நான் உட்காரும் இடத்திலேயே, என் நாற்காலிக்கு பக்கத்திலேயே ஒட்டுக் கேட்கும் கருவி வைத்துள்ளனர். லண்டனில் இருந்து அந்த கருவியை வரவழைத்துள்ளனர். அதிக விலை உள்ள கருவி. 2 நாட்களுக்கு முன்னர்தான் கண்டுபிடித்தோம்” என்று ராமதாஸ் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.
இதுதொடர்பாக நாம் தைலாபுரம் தோட்ட வட்டாரத்தில் விசாரித்தபோது, “கடந்த 3 மாதமாக தைலாபுரம் தோட்டத்தில் டாக்டர் யாரிடம் பேசுகிறார்? என்ன பேசுகிறார்? என்ன ஆலோசனை செய்கிறார்? என்ற தகவல்கள் எல்லாம் உடனுக்குடன் அன்புமணி குடுபத்தினருக்கு தெரியவந்துள்ளது.
ராமதாஸ் முன்னாள் மாவட்ட, மாநில நிர்வாகள், தற்போதைய மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோரை தொடர்புகொண்டு, ‘நாளை தைலாபுரத்துக்கு வாருங்கள்’ என்று அழைப்பு கொடுத்தால், அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் ராமதாஸ் தொடர்புகொண்டவரிடம் சவுமியா அன்புமணி தொடர்புகொண்டு பேசுகிறார்.
ஐயா, கூப்பிடுகிறார் என்று தைலாபுரத்துக்கு போகாதீங்க. உங்களுக்கு என்ன வேண்டுமோ சின்னய்யா செய்து கொடுப்பார். நீங்கள் அவரை வந்து பாருங்கள் என்று பேசுகிறார்.
உதாரணமாக கடலூர் கிழக்கு மாவட்டத்தில் பொதுக்குழுவை கூட்ட அந்த மாவட்ட நிர்வாகிகளிடம் டாக்டர் பேசினார். அவர்களிடம் அன்புமணியும், சவுமியாவும் உடனடியாக தொடர்புகொண்டு தைலாபுரம் தோட்டத்துக்கு போகாத அளவுக்கு தடுத்து, அவசரமாக ஒரு பொதுக்குழுவை கூட்டி அன்புமணி கலந்துகொண்டு பேசினார்.

இந்தநிலையில் ஜி.கே.மணி, சேலம் அருள் எம்.எல்.ஏ போன்றவர்கள் தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸிடம் நீங்கள் பேசுவது எல்லாம் அன்புமணிக்கு உடனுக்கு உடனே தெரியவருகிறது. அவருக்கு இங்கு ஆட்கள் இருக்கிறார்களா என்று ஆலோசித்திருக்கிறார்கள்.
இதனால் முக்கிய ஆலோசனைகளின் போது தோட்டத்தில் உள்ளவர்கள், வீட்டில் வேலை செய்பவர்கள், உதவியாளர்கள் உட்பட அனைவரையும் வெளியே அனுப்பிவிட்டு ராமதாஸ் ரகசிய ஆலோசனை செய்திருக்கிறார்.
ஆனால் இந்த விஷயமும் அன்புமணி காதுக்கு சென்றது. இதை அனைத்தும் தெரிந்துகொண்ட அன்புமணி, ‘ஐயாவிடம் சில தவறான விஷயங்களை பேசி எங்களுக்குள் பிளவை ஏற்படுத்துகிறார்கள்’ என்று பொதுவெளியில் பேசினார்.
இந்தசூழலில், தோட்டத்தில் பேசக்கூடிய விஷயமெல்லாம் எப்படி வெளியே போகிறது என்று தனக்கறிந்த முன்னாள் போலீஸ் அதிகாரிகளிடமும், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் தொடர்பாக அனுபவம் கொண்ட கட்சி நிர்வாகிகளிடமும் ஆலோசனை செய்திருக்கிறார் ராமதாஸ்.
இதையடுத்து வீட்டுக்குள் யாராவது ஒட்டுக்கேட்கும் கருவி பொருத்திருக்கிறார்களா என்று ஆராயப்பட்டது. தனக்கு தெரிந்து நண்பர்கள் மூலமாக எலக்ட்ரானிக்ஸ் சம்பந்தப்பட்ட நிபுணர்கள் வீட்டுக்குள் வந்து அலசி ஆராய்ந்துள்ளனர். அப்போதுதான் ஜூலை 3ஆம் தேதி ஒட்டுக்கேட்கும் கருவி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த கருவி லண்டனில் இருந்து வரவழைக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.4 முதல் 4.50 லட்சம் வரை இருக்கும். இந்த கருவிகள் இரண்டு வகை கொண்டது. ஒன்று சிம் கார்டு இல்லாத கருவி. இந்த கருவி மூலம் 500 மீட்டர் தூரம் வரை பேசுவதை கேட்க முடியும்.
மற்றொன்று சிம் கார்டு பொறுத்தப்பட்டது. இதன்மூலம் ஒருவர் பேசுவதை எங்கிருந்தாலும் கேட்காலம். ராமதாஸ் வீட்டில் பொறுத்தப்பட்டது சிம் கார்டு உள்ள கருவியாகும். அதில் இருந்தது இண்டர்நேஷனல் சிம் கார்டு.
இந்த கருவி பேசும் போது அல்லது வேறேதும் சத்தம் வந்தால் மட்டும் ரெக்கார்டு செய்து சம்பந்தப்பட்ட கைபேசி எண்ணுக்கு வாய்ஸ் ரெக்கார்டாக ஆட்டோமெட்டிக்காக அனுப்பி வைத்துவிடும்.
யாரும் பேசவில்லை என்றால் இந்த கருவி ஆன் ஆகாது. அதேசமயம் பேசுவதையோ அல்லது ஏதேனும் சத்தம் கேட்பதையோ தொடர்ந்து ரெக்கார்டு செய்யும் போது வேகமாக சார்ஜ் குறைந்துவிடும். இந்த தகவலும் சம்பந்தப்பட்டவரின் கைப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தியாக போய்விடும்.

பின்னர் அதற்கு சார்ஜ் போட வேண்டும். அப்படிதான் ராமதாஸ் வீட்டில் இருந்த கருவிக்கும் சார்ஜ் போடப்பட்டு வந்துள்ளது. அதற்கும் இங்கு யாரோ வேலை பார்த்திருக்கிறார்கள் என்ற சந்தேகம் உள்ளது.
இந்தநிலையில் தான் நேற்று முன் தினம் அன்புமணி தைலாபுரத்துக்கு வந்து சென்றார். இதனால் வேறேதும் கருவி பொறுத்தப்பட்டுள்ளதா என சந்தேகத்துடன் சில நண்பர்கள் மூலம் வீடு முழுவதும் ராமதாஸ் தேடினார்.
இன்று காலை 10.45 மணியளவில் விஐடி விஸ்வநாதன் காரில் தைலாபுரத்துக்கு சென்றார். அப்போது அவருடன் மற்றொரு காரில் பொறியியல் நிபுணர்களும் சென்றனர். அந்த டீம் வீடு முழுவதும் சோதனை செய்தனர்” என்றனர்.
ஒட்டுக்கேட்கும் கருவி ராமதாஸ் வீட்டில் இருந்தது குறித்து விழுப்புரம் காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, இதுதொடர்பாக எங்களிடம் யாரும் புகார் அளிக்கவில்லை. அந்த கருவியையும் ஒப்படைக்கவில்லை. புகாரை பெறாமல் எங்களால் புலனாய்வு செய்ய முடியாது என்றனர்.
தைலாபுர தோட்டத்தில் ஒட்டுக்கேட்கும் கருவி பொறுத்தப்பட்டது ராமதாஸுக்கும், அன்புமணிக்கும் இடையே மீண்டும் சேர முடியாத அளவுக்கு பெரும் விரிசலை ஏற்படுத்தியிருக்கிறது என்கிறார்கள் பாமக நிர்வாகிகள் . Wiretapping device Ramadoss