இந்திய பொருட்கள் மீதான 50% வரி விதிப்பை குறைப்பது தொடர்பாக டெல்லியில் அமெரிக்கா அதிகாரிகளுடன் இன்று (செப்டம்பர் 16) மத்திய அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
இந்தியா- அமெரிக்கா இடையேயான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அமெரிக்காவின் பால் மற்றும் வேளாண் பொருட்களுக்கு இந்திய சந்தைகளில் அனுமதிக்க வேண்டும் என நெருக்கடி தரப்படுகிறது. இதனை மத்திய அரசு ஏற்க மறுத்து வருகிறது.
இந்த நிலையில், இந்திய பொருட்கள் மீது 50% வரியை விதித்தது அமெரிக்கா. ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை காரணம் காட்டி 50% வரி விதிப்பை அமெரிக்கா அறிவித்தது.
இதனையடுத்து இந்தியா- அமெரிக்கா உறவில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் அமெரிக்காவுடனான இந்தியாவின் வர்த்தக பேச்சுகளும் முடங்கின.
இதனிடையே இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். இதனை பிரதமர் மோடியும் ஏற்றுக் கொண்டார்.
இதனடிப்படையில் டெல்லியில் இன்று இந்தியா- அமெரிக்கா அதிகாரிகள் 6-ம் கட்ட வர்த்தகப் பேச்சுவார்த்தையை நடத்துகின்றனர்.
இன்றையப் பேச்சுவார்த்தையில் அமெரிக்கா தரப்பில் மீண்டும் பால், வேளாண் பொருட்களுக்காக இந்தியா சந்தையில் அனுமதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தக் கூடும்; மத்திய அரசும், 50% வரி விதிப்பை கைவிட வலியுறுத்தும் என கூறப்படுகிறது.