தனியார் துறை ஊழியர்களுக்கான பிஎஃப் சம்பள வரம்பு உயர்த்தப்படுமா என்ற கேள்விக்கு மத்திய அரசு விளக்கம் கொடுத்துள்ளது.
தனியார் துறையில் பணிபுரியும் லட்சக்கணக்கான ஊழியர்கள், தங்களது வருமான வரம்பை உயர்த்தி, கட்டாய EPF திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போதுள்ள ரூ.15,000 மாத வருமான வரம்பு காலாவதியாகிவிட்டதாகவும்,
இதனால் பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் ஓய்வூதியப் பலன்களிலிருந்து விலக்கப்படுவதாகவும் அவர்கள் வாதிடுகின்றனர். இந்த விவகாரம் சமீபத்தில் நாடாளுமன்றத்தில் மீண்டும் விவாதிக்கப்பட்டது. இது பல கேள்விகளையும், கவலைகளையும், புதிய எதிர்பார்ப்புகளையும் உருவாக்கியுள்ளது.
EPF திட்டத்துக்கான சம்பள வரம்பு கடைசியாக 2014ஆம் ஆண்டு உயர்த்தப்பட்டது. அப்போது, ரூ.6,500 ஆக இருந்த வரம்பு ரூ.15,000 ஆக அதிகரிக்கப்பட்டது. அதன் பிறகு, நகர்ப்புற இந்தியாவில் சம்பளம் கணிசமாக உயர்ந்துள்ளது. ஆனால், EPF வரம்பு அப்படியே உள்ளது. இந்த இடைவெளி, தொழிலாளர் சங்கங்கள் மற்றும் ஊழியர் பிரதிநிதி அமைப்புகளின் கூற்றுப்படி, பணியாளர்களைப் பாதிக்கிறது.
இதுபோன்ற சூழலில், டிசம்பர் 1 அன்று நாடாளுமன்ற உறுப்பினர்களான பென்னி பெஹனான் மற்றும் டீன் குரியாக்கோஸ் ஆகியோர், EPF தகுதி வரம்பை ரூ.30,000 ஆக இரட்டிப்பாக்க அரசு திட்டமிட்டுள்ளதா என்றும், அமைப்புசாரா தொழிலாளர்களையும் (gig workers) இந்த திட்டத்தில் சேர்க்க முடியுமா என்றும் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, “EPFO-வில் பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்களில் பணிபுரியும், மாதத்திற்கு ரூ.15,000 வரை சம்பளம் பெறும் அனைத்து ஊழியர்களும் கட்டாயமாக EPF திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும்.
இதில் சேர்வதற்கு குறைந்தபட்ச சம்பளத் தேவை எதுவும் இல்லை. ஆனால் கட்டாயமாக சேர்ப்பதற்கான அதிகபட்ச சம்பள வரம்பு மட்டுமே உள்ளது.” என்று கூறினார். மேலும், இந்த வரம்பை மாற்றுவது என்பது, தொழிலாளர் சங்கங்கள் மற்றும் தொழில் அமைப்புகளுடன் கலந்தாலோசித்த பின்னரே எடுக்கப்படும் என்றும், ஏனெனில் இந்த மாற்றம் ஊழியர்களின் கையில் கிடைக்கும் சம்பளத்தையும், நிறுவனங்களின் பணியமர்த்தல் செலவுகளையும் பாதிக்கும் என்றும் அவர் விளக்கினார்.
அமைப்புசாரா தொழிலாளர்கள் குறித்து பேசிய அமைச்சர், அவர்கள் ஏற்கனவே சமூகப் பாதுகாப்புச் சட்டம், 2020-ன் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு சுகாதாரப் பாதுகாப்பு, விபத்துக் காப்பீடு, மகப்பேறு உதவி, முதியோர் பாதுகாப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பு நிதி போன்ற பலன்கள் வழங்கப்படுவதாகவும் தெளிவுபடுத்தினார்.
தற்போதைய அமைப்பு, பல ஊழியர்களுக்கு ஓய்வூதியப் பாதுகாப்பு இல்லாமல் இருப்பதை அரசு ஒப்புக்கொண்டுள்ளது. ரூ.15,000-க்கு சற்று அதிகமாக சம்பாதிக்கும் தனியார் துறை ஊழியர்கள் எந்த ஓய்வூதியத் திட்டத்திலும் சேராமல் இருப்பதாகவும், இதனால் அவர்கள் முதுமையில் நிதி ரீதியாகப் பாதிக்கப்படக்கூடும் என்றும் அரசு சமீபத்தில் ஒப்புக்கொண்டது. தற்போதைய விதிகளின்படி, ரூ.15,000 வரை சம்பாதிப்பவர்களுக்கு மட்டுமே EPF சேர்ப்பு கட்டாயமாகும். அதற்கு மேல் சம்பாதிப்பவர்கள் விருப்பப்பட்டால் விலகிக்கொள்ளலாம்.
மேலும் அவர்களைப் பதிவு செய்ய வேண்டிய சட்டப்பூர்வ கடமை நிறுவனங்களுக்கு இல்லை. இதன் காரணமாக, ரூ.18,000 முதல் ரூ.25,000 வரை சம்பாதிக்கும் நகர்ப்புறங்களில் உள்ள ஆயிரக்கணக்கான ஆரம்ப நிலை ஊழியர்கள், ஓய்வூதிய சேமிப்பிலிருந்து தானாகவே விலக்கப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
