அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப்பை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இன்று சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பைத் தொடர்ந்து ரஷ்யா- உக்ரைன் இடையேயான யுத்தம் முடிவுக்கு வரக் கூடும் என்பது எதிர்பார்ப்பு.
உக்ரைன் நாட்டின் பகுதிகளை ஆக்கிரமிக்கும் வகையில் 3 ஆண்டுகளுக்கு முன்னர் ரஷ்யா போரை தொடங்கியது. ரஷ்யா- உக்ரைன் இடையேயான போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இருநாடுகளிடையேயான யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர பல்வேறு தரப்புகள் முயற்சித்தன.
இந்த நிலையில் ரஷ்யா அதிபர் புதின், அண்மையில் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டார். அப்போது அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப்பை புதின் சந்தித்து பேசினார். உக்ரைனுடனான யுத்த நிறுத்தம் தொடர்பாக இரு தலைவர்களும் விவாதித்தனர்.
இதனைத் தொடர்ந்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இன்று அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப்பை சந்தித்து பேசுகிறார். முன்னதாக ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களை ஜெலன்ஸ்கி சந்தித்து பேசியிருந்தார்.
டொனால்ட் டிரம்ப்- ஜெலன்ஸ்கி இடையேயான பேச்சுவார்த்தைக்குப் பின்னர் ரஷ்யா- உக்ரைன் இடையேயான யுத்தம் முடிவுக்கு வரக் கூடும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.