பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி போராடி வரும் செவிலியர்கள் இன்று (டிசம்பர் 22) சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
பணி நிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 5 நாட்களாக தமிழ்நாடு முழுவதும் செவிலியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
செவிலியர்களின் கோரிக்கைகள்
- 2015 ஆம் ஆண்டு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (MRB) மூலம் தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட்ட சுமார் 8,000 செவிலியர்களின் பணிகளை உடனடியாக நிரந்தரம் செய்ய வேண்டும்.
- தற்போது தொகுப்பூதியத்தில் பணிபுரியும் செவிலியர்களுக்கு ₹18,000 மட்டுமே வழங்கப்படும் நிலையில், அதே பணியைச் செய்யும் நிரந்தரச் செவிலியர்களுக்கு ₹55,000 வரை வழங்கப்படுகிறது. நீதிமன்ற உத்தரவுப்படி, ‘சம வேலைக்கு சம ஊதியம்’ என்ற கொள்கையின் அடிப்படையில் தங்கள் ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்பதும் கோரிக்கை
- கொரோனா பெருந்தொற்று காலத்தில் அவசரகால அடிப்படையில் நியமிக்கப்பட்டு, பின்னர் பணி நீக்கம் செய்யப்பட்ட செவிலியர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும்.
- ஒப்பந்த செவிலியர்களுக்கு மகப்பேறு விடுப்பு போன்ற அடிப்படை சலுகைகள் மறுக்கப்படுவதால், அவற்றையும் வழங்க வேண்டும்
- செவிலியர் கண்காணிப்பாளர் நிலை பணியிடங்களை மீண்டும் உருவாக்க வேண்டும்
- நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப செவிலியர் பணியிடங்களை அதிகரிக்க வேண்டும்
- பட்டதாரி மற்றும் முதுகலை பட்டம் பெற்ற செவிலியர்களுக்கு ஊதிய உயர்வு, கருவூலம் மூலம் ஊதியம் பெறும் ஒப்பந்த செவிலியர்களுக்கு நிலுவைத் தொகையுடன் ஊதியம் வழங்க வேண்டும் என்பவை செவிலியர்களின் கோரிக்கைகள்.
இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அனைத்து மாவட்டங்களிலும் தொடர் போராட்டத்தை கடந்த 5 நாட்களாக செவிலியர்கள் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் இன்று செவிலியர்கள் சங்க பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இந்தப் பேச்சுவார்த்தையை தொடர்ந்து செவிலியர்கள் போராட்டம் முடிவுக்கு வரக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
