தூய்மை பணியாளர்களை நிரந்தரம் செய்வது தொடர்பாக முதல்வர் முடிவெடுப்பார் என்று அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.
சென்னை மாநகராட்சியின் 5 மற்றும் 6ஆவது மண்டலங்களில் 276 கோடி ரூபாய் மதிப்பிலான தூய்மை பணி ஒப்பந்தத்தை தனியார் நிறுவனத்திற்கு வழங்கி, கடந்த ஜூன் 16ஆம் தேதி சென்னை மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதை எதிர்த்து கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ரிப்பன் மாளிகை முன்பு தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இன்று (ஆகஸ்ட் 12) அமுமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேரில் சந்தித்து தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகளை கேட்டு அறிந்தார்.
சனம் செட்டி உள்ளிட்ட திரை பிரபலங்களும் தூய்மை பணியாளர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே தூய்மை பணியாளர்களின் போராட்டத்தை சட்டவிரோதம் என்று அறிவிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வினோத் முறையிட்டார்.
இதை மனுவாக தாக்கல் செய்தால் இன்று விசாரிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் கூறி இருந்தது.
ஆனால் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை.
இதையடுத்து தலைமை நீதிபதி அமர்வில் ஆஜரான வழக்கறிஞர் வினோத், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
இதைக்கேட்ட தலைமை நீதிபதி அமர்வு, நீங்கள் தாக்கல் செய்த மனுவில் குறைபாடுகள் உள்ளதாக பதிவுத் துறை கூறியுள்ளது. இதனை சரி செய்து புதிய மனு தாக்கல் செய்தால் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறினார்..
அப்போது தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி, ‘ தூய்மை பணியாளர்களுக்கு தமிழ்நாடு அரசு ஆதரவாக உள்ளது. அவர்களுக்கு எதிராக அரசு செயல்படுவது போல ஒரு போலி பிம்பத்தை சிலர் ஏற்படுத்தி உள்ளனர் ‘ என்று குறிப்பிட்டார்.
இந்த நிலையில் தூய்மை பணியாளர்களின் போராட்டம் குறித்து இன்று திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என். நேருவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
துறை அமைச்சரே தங்களை வந்து சந்திக்கவில்லை என்று தூய்மை பணியாளர்கள் கூறுகிறார்கள் என்ற கேள்விக்கு, “துறை அமைச்சராக நான் நான்கு நாட்கள் சென்றிருக்கிறேன். நான்கு நாட்களும் பேச்சு வார்த்தை நடத்தினோம். இதனால் 300 பேர் மீண்டும் வேலைக்கு வந்திருக்கிறார்கள்.
தொடர்ந்து தூய்மை பணியாளர்களிடம் பேசி வருகிறோம். நீதிமன்றத்தில் வழக்கு உள்ள காரணத்தால் வழக்கை முடித்து விட்டு வருகிறோம் என்று சொல்கிறார்கள்.
இந்தப் பிரச்சினையை சுமூகமாக தீர்ப்பதற்கு முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
தூய்மை பணியில் வடமாநில தொழிலாளர்களை ஈடுபடுத்த உள்ளதாக கூறுவது வதந்தி. எந்த தூய்மை பணியாளரையும் பணியை விட்டு நீக்கவில்லை.
சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் விவகாரத்தில் விரைவில் நல்ல முடிவு கட்டப்படும். தூய்மை பணியாளர்களை நிரந்தரம் செய்வது குறித்து முதலமைச்சர் முடிவு எடுப்பார். அவர்களது கோரிக்கையை ஒரே நாளில் நிறைவேற்ற முடியாது அவகாசம் தேவை” என்று கூறினார்.