மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடருமா?

Published On:

| By Kavi

மகளிர் உரிமைத் தொகை திட்டம் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் தொடருமா என்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு துறைகளின் சார்பில் அரசு நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று (நவம்பர் 10) வழங்கினார்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ‘‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் மூலமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் இதுவரைக்கும் 1 இலட்சத்து 14 ஆயிரம் மனுக்களில், பெரும்பாலான மனுக்கள் மகளிர் உரிமைத் தொகை தொடர்பாகதான் வந்திருக்கிறது. நான் உறுதியோடு சொல்கிறேன்… தகுதியுள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை நிச்சயம் விரைவில் கிடைக்கப் போகிறது. 

மகளிருக்கு உரிமைத்தொகை தரப்படும் என்று தேர்தல் அறிக்கையில் சொன்னபோது, அப்படியெல்லாம் தர முடியாது என்று, யார் சொன்னது? தமிழ்நாட்டின் நிர்வாகத்தை பாழ்படுத்திய அதிமுக-வும் சொன்னது.

ADVERTISEMENT

ஆனால், நாம் ஆட்சிப் பொறுப்புக்கு வந்து நிதி நெருக்கடியை ஓரளவுக்கு சரி செய்ததுமே உரிமைத்தொகையை வழங்க ஆரம்பித்தோம்! அப்போதும், என்ன சொன்னார்கள் என்றால், இந்த திட்டத்தை பாதியிலேயே நிறுத்திவிடுவார்கள் என்று வதந்தியை கிளப்பினார்கள்.

ஆனால், அதற்கு மாறாக இதுவரைக்கும் 27 மாதங்களில் 1 கோடியே 14 இலட்சம் பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வீதம் இதுவரை தலா 27 ஆயிரம் ரூபாய் வழங்கி இருக்கிறோம். 1000 ரூபாய் எதற்கென்று சிலர் சம்பந்தம் இல்லாமல் பேசுகிறார்கள். நான் தெளிவாக சொல்கிறேன்…

ADVERTISEMENT

எங்கள் அண்ணன் ஸ்டாலின் வழங்குகின்ற மாதாந்திர சீர் என்று என்னுடைய சகோதரிகள் சொல்கிறார்களே! இது உதவித்தொகை இல்லை; உரிமைத்தொகை! இந்தத் தொகையை வழங்க ஆரம்பிக்கும்போது என்னிடம் கேட்டார்கள்.  “யாருக்கு இந்த ஆயிரம் ரூபாய்?” கிடைக்கும் என்று சட்டமன்றத்தில் கேட்டார்கள்!

நான் சொன்னேன், “யாருக்கெல்லாம் ஆயிரம் ரூபாய் தேவையோ, அவர்களுக்கெல்லாம் கிடைக்கும்” என்று நான் சொன்னேன். இப்போதும் சொல்கிறேன் – தகுதியுள்ள எல்லோருக்கும் நிச்சயம் கிடைக்கும்.  

தமிழ்நாட்டு மகளிர் முன்னேறி வருவதற்கு துணையாக இருக்கும் இந்த கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, தமிழ்நாட்டின் வளர்ச்சியின் அடுத்தக்கட்ட பாய்ச்சலுக்கு அடித்தளமாக இருக்கும்போது, நம்முடைய திராவிட மாடல் 2.0 அரசிலும் நிச்சயம் தொடரும்” என்று கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share